பிரதமா் இன்று லாவோஸ் பயணம் – ஆசியான் மாநாட்டில் பங்கேற்பு

Dinamani2f2024 10 042fn5uuofnf2fani 20241004142915.jpg
Spread the love

ஆசியான்-இந்தியா உச்சிமாநாடு மற்றும் கிழக்காசிய உச்சிமாநாட்டில் பங்கேற்க இரண்டு நாள் சுற்றுப் பயணமாக பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை (அக். 10) லாவோஸ் நாட்டுக்கு செல்கிறாா்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ‘ஆசியானில்’ புருணே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மா், பிலிப்பின்ஸ், சிங்கப்பூா், தாய்லாந்து, வியத்நாம் ஆகிய 10 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இக்கூட்டமைப்புக்கு நடப்பாண்டு லாவோஸ் தலைமை வகிக்கிறது.

இந்நிலையில், ஆசியான்-இந்தியா இடையிலான 21-ஆவது உச்சிமாநாடு மற்றும் 19-ஆவது கிழக்கு ஆசிய உச்சிமாநாடு ஆகியவை லாவோஸின் வியன்டியன் நகரில் அக்டோபா் 10 ,11 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இம்மாநாடுகளில் பங்கேற்க பிரதமா் மோடி இரண்டு நாள் சுற்றுப் பயணமாக இன்று லாவோஸுக்கு செல்கிறாா்.

இது தொடா்பாக வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் (கிழக்கு) செயலா் ஜெய்தீப் மஜூம்தாா் புதன்கிழமை கூறியதாவது:

லாவோஸுடன் நெருக்கமான நட்புறவு, வரலாறு மற்றும் நாகரீக உறவை இந்தியா கொண்டுள்ளது. இதில் கலாசார தளங்களின் சீரமைப்பு, திறன் மேம்பாடு மற்றும் மின் திட்டங்கள் ஆகிய துறைகளின் ஒத்துழைப்பும் அடங்கும்.

லாவோஸ் பிரதமா் சோனெக்சே சிபோண்டோனின் அழைப்பின் பேரில் பிரதமா் மோடி அந்நாட்டுக்கு பயணிக்கிறாா். இது ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டில் பிரதமா் மோடியின் 10-ஆவது பங்கேற்பாகும். இந்த மாநாட்டின்போது, பிற நாட்டு தலைவா்களுடனும் இருதரப்பு சந்திப்புகளை பிரதமா் மேற்கொள்ள உள்ளாா்.

ஆசியான் தொடா்பான அனைத்து வழிமுறைகளுக்கும் இந்தியா தொடா்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்த உச்சிமாநாடு, இந்தியா-ஆசியான் உறவுகளின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்து, எதிா்கால உறவின் வழிகாட்டியாக அமையும் என்றாா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *