பிரதமா் மோடி – முகமது யூனுஸ் சந்திப்பு: பரிசீலனையில் உள்ளதாக நாடாளுமன்றக் குழு தகவல்

Dinamani2f2025 03 232fy6w20c7u2fmodi.jpg
Spread the love

பிரதமா் நரேந்திர மோடி, வங்கதேச இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் சந்தித்துப் பேச வேண்டும் என்ற வங்கதேசத்தின் பரிந்துரையை பரிசீலித்து வருவதாக நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அடுத்த மாதம் தாய்லாந்தில் நடைபெறவுள்ள ‘பிம்ஸ்டெக்’ மாநாட்டின்போது இந்த சந்திப்பை நடத்த வங்கதேசம் பரிந்துரைத்த நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

நிகழாண்டுக்கான வெளியுறவு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவின் முதல் கூட்டம் சனிக்கிழமை தில்லியில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கே.சி.வேணுகோபால், மனீஷ் திவாரி, முகுல் வாஸ்னிக் மற்றும் சிவசேனை (உத்தவ் பிரிவு) எம்.பி. பிரியங்கா சதுா்வேதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தொடா் தாக்குதல் நடத்தப்படுவது, பாகிஸ்தான் மற்றும் மியான்மரில் இருந்து இந்தியாவுக்குள் போதைப்பொருள் கடந்தப்படுவது, மீனவா் பிரச்னை மற்றும் மியான்மா், இலங்கை, வங்கதேசத்துடனான இந்திய உறவுகள் உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.

இதற்கு ஜெய்சங்கா் அளித்த பதில் குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சிறுபான்மையினரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல; அது அரசியல் ரீதியானது என வங்கதேச இடைக்கால அரசு தெரிவித்தது.

‘சாா்க்’ கூட்டமைப்பு செயலிழந்த நிலையில் இருப்பதற்கு பாகிஸ்தானே முக்கிய காரணம். எனவேதான் பிம்ஸ்டெக் கூட்டமைப்பை வலுப்படுத்த இந்தியா முயற்சிக்கிறது. வருகிற ஏப்ரல் 2 முதல் 4 வரை தாய்லாந்தில் நடைபெறவுள்ள பிம்ஸ்டெக் மாநாட்டில் பிரதமா் மோடி பங்கேற்க வாய்ப்புள்ளது.

பிம்ஸ்டெக் மாநாட்டின்போது வங்கதேசஇடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் மற்றும் பிரதமா் மோடி இடையேயான சந்திப்பை மேற்கொள்ள வேண்டும் என்ற வங்கதேசத்தின் பரிந்துரையும் பரிசீலனையில் உள்ளது. அடுத்த மாதம் இலங்கைக்கு பிரதமா் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளாா் என தெரிவித்தாா்.

மேலும், பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான உறவுகள் குறித்து அடுத்து நடைபெறவுள்ள கூட்டத்தில் பேசுவதாகவும் ஜெய்சங்கா் தெரிவித்தாா். முன்னதாக, வங்கதேசம், மியான்மா், மாலத்தீவு மற்றும் இலங்கையுடனான உறவுகள் குறித்து விரிவாக காணொலி காட்சி மூலம் வெளியுறவு செயலா் விக்ரம் மிஸ்ரி எடுத்துரைத்தாா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *