சென்னை: கல்வித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களில் ஈடுபட்ட பிரபல கல்வியாளர் வசந்தி தேவி காலமானார். அவருக்கு வயது 87.
வசந்தி தேவி 1938-ஆம் ஆண்டில் திண்டுக்கல்லில் பிறந்தார். இவர் தொழிற்சங்கவாதியும், சிந்தனையாளருமான சக்கரைச் செட்டியாரின் மகள் வழி பேத்தி. இவருடைய தந்தை பி.வி.தாஸ் வழக்கறிஞராகவும், திண்டுக்கல் நகராட்சித் தலைவராகவும் இருந்தார். ராணி மேரி கல்லூரியில் பேராசிரியையான வசந்தி தேவி, 1987-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த கல்லூரி ஆசிரியர்களின் போராட்டத்துக்கு தலைமை தாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
1988 முதல் 1990 வரை இவர் கும்பகோணத்தில் உள்ள அரசு மகளிர் கல்லூரியின் முதல்வராக பணியாற்றினார். 1992 முதல் 1998 வரையில் இவர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றினார். பின்னர் 2002 முதல் 2005 ஆம் ஆண்டு வரையில் இவர் தமிழ்நாட்டின் மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராகவும் இருந்தார்.
வசந்தி தேவி 2016-ஆம் ஆண்டு ஆர்.கே.நகரில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கட்சியின் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பல்வேறு கல்வி மற்றும் மகளிர் மேம்பாட்டு திட்டங்களுக்கு காரணமாக இருந்தவர் வசந்தி தேவி. தமிழகத்தில் மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கும் திட்டத்துக்கு முன்னோடியாக இருந்துள்ளார் இவர்.
யார் இந்த வசந்தி தேவி? – “ஒரு மாணவர் எந்தத் துறையை வேண்டுமானாலும் படிப்பவராக இருக்கலாம்; அவர் படித்து முடித்து வெளியே செல்லும்போது சமூகக் கல்வியையும் சேர்த்து முடித்திருக்க வேண்டும். இந்தியக் கல்வி நிறுவனங்களோ சமூகத்துடன் மாணவர்கள் கலந்துவிடாமல், தம்மைச் சுற்றி தடித்த சுவர்களை உயரமான அளவில் எழுப்பி வைத்திருக்கின்றன” என்று அடிக்கடி கூறிய வசந்தி தேவி, தன்னுடைய பணிக் காலம் முழுவதும் இந்தச் சூழலை மாற்றச் செயல்பட்டவர்.
சமூகக் கல்வியைப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக்கினார் வசந்தி தேவி. ஆய்வகத்தில் இருந்து களத்துக்கு என்ற பெயரில் ஆசிரியர்களையும் மாணவர்களையும் வெளியே கொண்டுசென்றார்; படைப்பாளிகளையும் சமூகச் செயற்பாட்டாளர்களையும் உள்ளே அழைத்து வந்தார். மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக அவர் பணியாற்றுகையில் கொண்டுவந்த முக்கியமான திட்டங்களில் ஒன்று கிராமப்புறப் பெண்களுக்கு சைக்கிள் பயிற்சி அளிக்கும் திட்டம்.
இன்றைய போக்குவரத்து வசதி அன்றைக்கு நம்முடைய குக்கிராமங்களில் கிடையாது. பெண் பிள்ளைகள் பலர் படிப்பைப் பாதியில் நிறுத்த போக்குவரத்து வசதியின்மை ஒரு முக்கியமான காரணமாக இருந்தது. மேலும், கிராமப்புறங்களில் குடிசைத் தொழில்களில் ஈடுபட்டிருந்த பல பெண்கள் தங்கள் உற்பத்திப் பொருட்களை நகரங்களுக்குக் கொண்டுவந்து விற்பதற்கும் இது ஒரு தடையாக இருந்தது.
வசந்தி தேவி முதலில் கல்லூரி மாணவிகளுக்கும், பின் அவர்கள் மூலமாக கிராமப்புறப் பெண்களுக்கும் சைக்கிள் பயிற்சி அளிக்கும் திட்டத்தைக் கொண்டுவந்தார். சைக்கிள் வாங்குவதற்கான உதவிகளுக்கும் ஏற்பாடு செய்தார். தன் பல்கலைக்கழக ஆளுகைக்குட்பட்ட அறுபதுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இதை அவர் கொண்டுவந்தபோது, ஆயிரக்கணக்கான பெண்கள் கிராமங்களைவிட்டு வெளியே வர அது வழிவகுத்தது. இப்படி சின்ன விஷயங்கள் மூலமாகச் சட்டகங்களுக்கு வெளியே நிறைய சிந்தித்தவர் அவர்.
மகளிர் ஆணையத் தலைவராக இருந்தபோது, அதன் குறுகிய அதிகார எல்லைக்கு உட்பட்டு, அவர்கள் மேம்பாட்டுக்காக உழைத்தார். பெண்களுக்கு எதிரான எல்லா அதிகார மையங்களோடும் மோதினார். முடியாதபோது, இயலாமையை வெளிப்படையாகப் பேசினார். கல்வி உரிமை, மனித உரிமைகள், தலித்துகளின் நலன், பெண்கள் முன்னேற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்று பல்வேறு தளங்களிலும் தொடர்ந்து செயல்பட்டு வந்தவர் வசந்தி தேவி. – இந்து தமிழ் திசை – கருத்துப் பேழை கட்டுரையில் இருந்து.