பிரபல கிரிக்கெட் வீரர் உடல் நலம் பாதிப்பு, மருத்துவமனையில் அனுமதி: ரசிகர்கள் அதிர்ச்சி – Kumudam

Spread the love

2025-26 ரஞ்சி டிராபி தொடர் தற்போது அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய லீக் சுற்றுப் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், நாளை (பிப்ரவரி 6) முதல் நாக்-அவுட் சுற்றான காலிறுதிப் போட்டிகள் தொடங்க உள்ளது. 

மிகவும் கடினமான லீக் சுற்றுகளைக் கடந்து மும்பை, கர்நாடகா, பெங்கால், ஆந்திரா, ஜார்கண்ட், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் ஆகிய 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. இந்த முக்கியமான நாக்-அவுட் போட்டிகள் நாளை முதல் பிப்ரவரி 10-ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெறவுள்ளன. இதில் வெற்றி பெறும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும் என்பதால் போட்டிகளில் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஞ்சி டிராபியில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி, இந்த முறை ஷர்துல் தாகூர் தலைமையில் மிகவும் வலுவாகக் களமிறங்குகிறது. அந்த அணியில் நட்சத்திர வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இருப்பினும், அணியின் முதுகெலும்பாகத் திகழும் நட்சத்திர பேட்ஸ்மேன் சர்ப்ராஸ் கான் வைரல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். 

சர்ப்ராஸ் கானின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தாலும், அவர் முழுமையாகக் குணமடைந்து மைதானத்திற்குத் திரும்ப குறைந்தது 3 முதல் 4 நாட்கள் வரை ஆகலாம் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டெல்லி அணிக்கு எதிரான முந்தைய போட்டியிலேயே அவர் உடல்நலக்குறைவு காரணமாக ஃபீல்டிங் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

நாளை காலிறுதி ஆட்டம் தொடங்கவுள்ள நிலையில், சர்ப்ராஸ் கான் விளையாடுவது மிகப்பெரிய கேள்விக்குறியாகியுள்ளது.மும்பை அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங்கில் சர்ப்ராஸ் கானின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. கடினமான நேரங்களில் ரன்களைக் குவித்து அணியை மீட்கும் வல்லமை படைத்த அவர் இல்லாதது, மும்பை அணியின் பேட்டிங் வரிசையைப் பாதிக்கக்கூடும். சர்ப்ராஸ் கான் விளையாடுவது சந்தேகம் ஆகியுள்ள நிலையில், அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *