1992 மற்றும் 2006 க்கு இடைப்பட்ட காலத்தில் டேமியன் மார்ட்டின் ஆஸ்திரேலிய அணிக்காக 67 டெஸ்ட் மற்றும் 208 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். 2003 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா இந்தியாவை வீழ்த்தியபோது, உடைந்த விரலுடன் பேட்டிங் செய்த போதிலும், அவர் ஆட்டமிழக்காமல் 88 ரன்கள் எடுத்தது அவர் கிரிக்கெட் விளையாட்டில் குறிப்பிடதக்க தருணம்.
54 வயதான டேமியன் மார்ட்டின், கடந்த டிசம்பர் 26 அன்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து குயின்ஸ்லாந்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பாதிப்பு தீவிரமாக இருந்ததால், மருத்துவர்கள் அவரைத் தூண்டப்பட்ட கோமா நிலைக்குக் கொண்டு சென்று தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) வைத்துள்ளனர்.
மூளை மற்றும் தண்டுவடத்தைச் சுற்றியுள்ள சவ்வுகளில் வீக்கத்தை ஏற்படுத்தும் மெனிஞ்சைடிஸ் (Meningitis) எனப்படும் மூளைக்காய்ச்சலால் டேமியன் பாதிக்கப்பட்டுள்ளார்.
டேமியன் உடல்நிலை மோசமாக இருந்தாலும், சிறந்த முறையில் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக அவரது நெருங்கிய நண்பரும், முன்னாள் வீரருமான ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.
