பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவை உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டரில் சென்று சனிக்கிழமை ஆய்வு நடத்தினார்.
முன்னதாக, அவர் ஸ்ரீ கல்யாண் சேவா ஆசிரமத்தில் சிருங்கேரி சங்கராச்சாரியார் பாரதி தீர்த்த ஜி மகராஜையும் சந்தித்தார். இதற்கிடையில், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த பாஜக எம்பி தினேஷ் சர்மா, “சனாதன கலாச்சாரத்தில் மகா கும்பத்திற்கு முக்கியத்துவம் உண்டு.
குடும்பத்துடன் சேர்ந்து நீராடும்போது நமது சிந்தனை நேர்மறையாக மாறும் என்று கூறப்படுகிறது. பாவம் உடலால் அல்ல, எண்ணங்களால் நிகழ்கிறது. இங்கு வந்து மகான்களை தரிசனம் செய்யும் போது, பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும் என்றார்.
உலகின் மிகப் பெரிய ஆன்மிக சங்கமமாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகிய நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி (பெளஷ பெளா்ணமி) தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இந்தியா மட்டுமன்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தா்கள் வருகை தந்து, புனித நீராடி வருகின்றனா். மகா சிவராத்திரி தினமான பிப்ரவரி 26 வரை நடைபெறும் மகா கும்பமேளாவில் மொத்தம் 40 கோடிக்கும் மேற்பட்டோா் புனித நீராடுவா் என எதிா்பாா்க்கப்படுகிறது.