“பிரவீன் சக்கரவர்த்திக்கு திமுக மீது ஒரு பகை இருக்கிறது. அந்தப் பகையை தீர்த்துக்கொள்ள.!” – கோபண்ணா | gopanna interview regarding 2026 election and praveen chakravarthy sketch

Spread the love

“பிரவீன் சக்கரவர்த்திக்கு திமுக மீது தனிப்பட்ட பகை என்கிறீர்கள். ஆனால், அவரோ `குறிப்பிட்ட நாற்பது ஐம்பது பேர் தொடர்ந்து பதவியில் இருப்பதற்காக தமிழக காங்கிரஸ் கட்சியை நடத்த முடியாது. கட்சியை வளர்க்க வேண்டும்’ என்கிறாரே?”

“தமிழ்நாடு காங்கிரஸ் விவகாரங்களில் பிரவீன் சக்கரவர்த்தி சொல்கிற கருத்துக்கள் யாருமே ஏற்கக் கூடியது அல்ல. தமிழக காங்கிரஸைப் பொறுத்தவரை மக்களவையில் 10 உறுப்பினர்கள் இருக்கிறோம். சட்டசபையில் 25 பேர் போட்டியிட்டு 18 வெற்றிபெற்றுள்ளோம். பிரவீன் சக்கரவர்த்தி சொல்வதைக் கேட்டால், இருப்பதும் போய்விடும். எதுவுமே இல்லாத ஒரு அவல நிலைக்கு காங்கிரஸ் செல்ல வேண்டிய ஒரு சூழலைதான் பிரிவின் சக்கரவர்த்தி ஏற்படுத்த முனைகிறார்.

அவர் சொல்வது தோல்விக்கான கூட்டணி. வெற்றிக்கான வாய்ப்பே இல்லாத ஒரு கூட்டணியக் கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறார் அவர். தமிழ்நாட்டில் பாஜகவை காலூன்ற முடியாமல் தடுக்க வேண்டும் என்றால் திமுக- காங்கிரஸ் கூட்டணி அவசியம். 

தமிழகத்தில் பாஜக கால் பதிப்பதை தவெக கூட்டணி மூலம் தடுக்க முடியாது. . ஏனென்றால், பாஜக-வை எதிர்த்து சேலம் கூட்டத்தில் கூட ஒரே ஒரு வார்த்தை கூட விஜய் பேசவில்லை. அவர் எதிர்ப்பது திமுக-வை மாட்டும்தான். வேறு யாரையும் நான் எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறார். அரசியல் எதிரி கொள்கை எதிரி என்று சொன்னவர் கொள்கை எதிரியை விட்டுட்டார். ஏனென்றால், அவருக்கு கொள்கையே கிடையாது. அரசியல் எதிரியை எதிர்த்துதான் கருத்து கூறி இருக்கிறார். பாஜகவை எதிர்க்க அவருக்கு தயக்கம். கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை இருக்கிறது.

ஜனநாயகன் படப் பிரச்சனை இருக்கிறது. இவ்வளவு பாதிப்புக்கு உள்ளான நிலையில் கூட, அவர் பாஜகவை எதிர்ப்பதற்கு எந்த நிலையிலும் தயாராக இல்லை. அப்படிப்பட்டவரை நம்பி எப்படி கூட்டணி வைக்க முடியும்?  பாஜக எதிர்ப்பை முதன்மையான நோக்கமாக கொண்டு, நாள்தோறும் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் உரிமை குரலுக்காக போராடுகிறார். ராகுல் காந்தி எந்த பாஜகவை எதிர்த்து போராடுகிறாரோ அந்த பாஜகவை எதிர்த்து கருத்து கூற துணிவற்ற விஜய்யை காங்கிரஸ் கட்சியும் தலைவர் ராகுல் காந்தியும் ஆதரிப்பார்கள் என்று சொல்லுவதை என்னால் கற்பனையில கூட நினைத்து பார்க்க முடியவில்லை”

“திமுகவின் நிலைப்பாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால், மீண்டும் மாணிக்கம் தாகூரும், பிரவீன் சக்கரவர்த்தியும்தான் எதிர்வினையாற்றுகிறார்கள். இவ்வளவு பிரச்னைகளுக்கும் மத்தியில் ராகுல் காந்தி அமைதி காக்கிறாரே?’’

“திமுக – காங்கிரஸ் கூட்டணி எந்த அடிப்படையில் அமைய வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டியது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், அகில இந்திய தலைவர் கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர்தான். இவர்கள் யாரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்ன கருத்துக்கு எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைமை முடிவு செய்யட்டும், திமுக தலைமையோடு பேசட்டும்.  இந்தக் கூட்டணியில் விரிசலோ முறிவோ ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை. இந்தக் கூட்டணிக்கு தேசிய அளவிலான நிர்பந்தம் இருக்கிறது. இந்தப் பிரச்னைகள் விரைவில் தீர்க்கப்படும்.’’

“நீங்கள் இப்படி சொல்கிறீர்கள். ஆனால், களத்தில் பிரச்சனை வந்து எதிரொலிக்க ஆரம்பித்துவிட்டது. காங்கிரஸுக்கு பூத் கமிட்டி அமைக்ககூட ஆள் இல்லை என்கிறார் திமுக எம்எல்ஏ தளபதி, அமைச்சர் ராஜ கண்ணப்பன் காங்கிரஸ் வந்தா வரட்டும் வராட்டி போகட்டும் என்கிறார்?

“இரு தரப்பிலுமே கருத்து கூறுகிறார்கள். எதிர்வினை ஆற்றுகிறார்கள். அது ஊடகங்களில் வெளிவருகிறது. திமுக – காங்கிரஸ் கூட்டணியில் விரிசலை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சிலர் செயல்படுகிறார்கள்.  இப்படி தொடர்ந்து நடக்கிறது. இதற்கு விரைவில் ஒரு முடிவு கட்டப்படும். ஒரு சில நாட்கள்ல எல்லாம் சரியாகிவிடும். கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, இதெல்லாம் பழைய கதையாகி எல்லாம் ஒதுக்கப்படும்”

முழு பேட்டியைப் பார்க்க கீழே உள்ள லிங்க்-ஐ கிளிக் செய்யவும்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *