ஜப்பானின் சிபா மாகாணத்தில் உள்ள இச்சிகாவா நகர மிருகக்காட்சிசாலையில் கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் “பஞ்ச்’ என்ற ஜப்பானிய மக்காக் குரங்கு குட்டி பிறந்தது. பொதுவாக குரங்கு குட்டிகள் பிறந்தவுடன் தனது தாயின் வயிற்றை இறுகப் பற்றிக்கொண்டு பாதுகாப்பாக உணரும்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக பஞ்ச் பிறந்த சில நாள்களிலேயே அதன் தாய் அந்தக் குட்டியைப் பராமரிக்க மறுத்து கைவிட்டது. தாயின் அரவணைப்பு இல்லாமல் தவித்த குட்டி பஞ்ச், மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகி தவித்தது.
பஞ்ச்-சின் தனிமையைப் போக்க முயன்ற உயிரியல் பூங்கா ஊழியர்கள், அதற்கு ஒரு போர்வையையும், ஒரு பெரிய ஒராங்குட்டான் பொம்மையையும் வழங்கினர். யாரும் எதிர்பார்க்காத வகையில், பஞ்ச் அந்த பொம்மையைத் தனது தாயாகவே கருதி அதனுடன் ஒட்டிக்கொண்டது.
அந்தப் பொம்மையைத் தூக்கிக்கொண்டு அலைவது, அதைக் கட்டிப்பிடித்துக்கொண்டு தூங்குவது என பஞ்ச் காட்டிய அன்பு, சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
தற்போது 7 மாதங்கள் ஆகும் பஞ்ச், அந்த பொம்மையின் துணையுடன் தனது பயத்திலிருந்து மெதுவாக வெளிவரத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, கடந்த சில வாரங்களாக பஞ்ச் தனது பொம்மையைச் சற்று தள்ளி வைத்துவிட்டு, மற்ற குட்டி குரங்குகளுடன் ஓடி விளையாடத் தொடங்கியுள்ளது.