பிரேஸில் நாட்டில் பேருந்து விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
மினாஸ் ஜெராய்ஸ் பகுதியிலுள்ள டியோஃபிலோ ஒடோனி நகரில் 45 பேருடன் சென்ற பேருந்தின் மீது, லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில், பேருந்து ஓட்டுநர் உள்பட 38 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட பயணிகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்துக்கு காரணமான லாரியை ஓட்டிய ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது. விபத்துக்குள்ளான லாரி மீது கார் ஒன்றும் மோதிய நிலையில், அந்த காரிலிருந்தவர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பியுள்ளனர்.
விபத்துக்கான காரண்ம் குறித்து கண்டறிய தடயவியல் விசாரணை நடைபெறுவதாகவும், அதன்பிறகே விபத்துக்கான சரியான காரணம் தெரியவருமென்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சா பாலோ பகுதியிலிருந்து புறப்பட்டு பாஹியாவை நோக்கி பிஆர்-116 தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை சென்று கொண்டிருந்த பேருந்தின் ஒரு சக்கரம் அதிகாலை 4 மணியளவில் திடீரென வெடித்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, எதிர் திசையில் வந்து கொண்டிருந்த லாரியில் மோதியதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, சம்பவத்தை நேரில் கண்டதாக கூறும் சிலர், கிரானைட் கற்களுடன் வந்த லாரி தாறுமாறாக ஓடி பேருந்தில் மோதி விபத்து ஏற்பட்டதாகத் தெரிவித்தனர்.