நாய்கள் எப்போதும் நன்றியுள்ளவை என்பதை பல சந்தர்ப்பங்களில் நிரூபித்து இருக்கின்றன. மேற்கு வங்க மாநிலத்தில், தெரு நாய்கள் ஒன்று சேர்ந்து, இரவு நேரத்தில் குளிரில் அனாதையாக விடப்பட்ட ஒரு குழந்தையை பாதுகாத்துள்ளன.
நாடியா மாவட்டத்தின் நவத்வீப் பகுதியில் அதிகாலை நேரத்தில் ஒரு தெருவில், தெருநாய்கள் ஒரு பிளாஸ்டிக் பேக்கை சுற்றி நின்றுகொண்டிருந்தன. அந்த பிளாஸ்டிக் பேக்கில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டது.
காலை எழுந்த அப்பகுதி மக்கள், தெருநாய்கள் ஒரு பேக்கை சுற்றி நிற்பதை கவனித்தனர். அதிலிருந்து குழந்தை அழும் சத்தம் கேட்க, உடனே நாய்களை விரட்டிவிட்டு அந்த பிளாஸ்டிக் பேக்கை திறந்து பார்த்தனர்.
அதில் பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தை இருந்தது. அக்குழந்தை குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்துவிட்டு, உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்தனர்.

அக்குழந்தையை முதன்முதலில் பார்த்த சுக்லா மண்டல் என்ற பெண் இதுகுறித்து கூறுகையில்,
“காலையில் எழுந்தபோது தெருநாய்கள் சுற்றி நின்று ஒரு பிளாஸ்டிக் பேக்கை பாதுகாத்துக்கொண்டிருந்தன. அவை ஆக்ரோஷமாக இல்லை; ஆனால் சுற்றி நின்றுகொண்டிருந்தன. நாங்கள் அந்த பிளாஸ்டிக் பேக்கை திறந்து பார்த்தபோது அதில் குழந்தை இருந்தது.
அதில் குழந்தை இருப்பதை தெரிந்துகொண்டதால்தான் நாய்கள் இரவு முழுவதும் அதை பாதுகாத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்,” என்றார்.
இதுகுறித்து சுபாஷ் என்பவர் கூறுகையில்,
“நாங்கள் பக்கத்து வீட்டில் குழந்தை அழுவதாக நினைத்தோம். ஆனால் தெருவில் குழந்தை கிடக்கும் என்று நினைக்கவேயில்லை. வீட்டிற்கு வெளியில் வந்து பார்த்தபோது தெருநாய்கள் பாதுகாவலர்கள் போல நின்றுகொண்டிருந்தன. பக்கத்து வீட்டுக்காரர் சுக்லா அந்த பேக்கை எடுக்கச் சென்றபோது நாய்கள் விலகி நின்று வழிவிட்டன,” என்றார்..