இஸ்ரேலிய இராணுவம் காஸாவின்மீது நடத்திய தாக்குதலில், பிறந்து 4 நாள்களே ஆன இரட்டைக் குழந்தைள் கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
காசாவின் டெய்ர் அல்-பாலா பகுதியின்மீது இஸ்ரேலிய ராணுவம் ஆக. 13, செவ்வாய்க்கிழமை, வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் சுமார் 90 பேர் வரையில் கொல்லப்பட்டும், 88 பேர் காயமடைந்தும் உள்ளனர்.
அதுமட்டுமின்றி, முகமது அபுவெல் கோமசன் என்பவரின், பிறந்து நான்கு நாள்களே ஆன இரட்டைக் குழந்தைகளும் இந்தத் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.
அபுவெல், தனது குழந்தைகளுக்காக பிறப்புச் சான்றிதழ் பதிவு செய்வதற்காக, ஆக. 13-ல் உள்ளூர் அரசாங்க அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில், அரசு அலுவலகத்தில் அபுவெல் இருந்தபோது, அங்கு வந்த சிலர், அபுவெல் தங்கியிருக்கும் டெய்ர் அல்-பாலா நகருக்கு அருகில் குண்டு வீசப்பட்டதாகக் கூறியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அபுவெல் வீட்டுக்கு சென்று பார்த்தபோது, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தனது மனைவி, இரட்டைக் குழந்தைகள், மாமியாரும் உயிரிழந்தது அறிந்து அதிர்ச்சியாகியுள்ளார்.
இதனையடுத்து, அபுவெல் “குழந்தைகள் பிறந்ததைக் கொண்டாடக்கூட எனக்கு நேரம் கிடைக்கவில்லையே’’ என்று கூறி வருத்தம் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் தாக்குதல் தொடங்கிய அக்டோபர் 7 ஆம் தேதி முதல், புதிதாகப் பிறந்த குழந்தைகள் 115 பேரும், கிட்டத்தட்ட 40,000 பாலஸ்தீனியர்களும் இறந்துவிட்டதாகவும், 92,240 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.