பிலிப்பின்ஸில் வெள்ளம், நிலச்சரிவு… 115 பேர் பலி!

Dinamani2f2024 10 262fv7ecavzt2fap24300260456945.jpg
Spread the love

பிலிப்பின்ஸ் நாட்டில் ட்ராமி புயலால் ஏற்பட்ட கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் இதுவரை 115 பேர் வரை உயிரிழந்து, 100 -க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

பிலிப்பின்ஸ் வடமேற்கு பகுதியில் கடந்த நேற்று (அக். 25) ட்ராமி புயல் காரணமாக இதுவரை 115 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 100 -க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். இது, தென்கிழக்கு ஆசிய தீவுக்கூட்டங்கள் இருக்கும் பகுதியில் இந்தாண்டு வீசிய அழிவுகரமான புயல் என்று கூறப்படுகிறது.

பல இடங்களில் வீடுகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர், அவசர உதவிக் குழு, மோப்ப நாய்கள் ஆகியவற்றின் உதவியுடன் காணாமல் போன மக்களை மீட்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.

சேற்றில் புதைந்த பலரது உடல்களும் கண்டெடுக்கப்பட்டு அவர்களுக்கு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.

இதையும் படிக்க | வங்கதேசத்தில் ஹிந்துக்கள் பேரணி!

பிலிப்பின்ஸ் அதிபர் ஃபெர்டினண்ட் மார்கோஸ் மிகவும் பாதிக்கப்பட்ட தென்கிழக்கு மணிலாவில் உள்ள பகுதிகளை ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர், “புயலின் தாக்கம் முன்னெப்போதையும் விட அதிகமாக இருந்தது. இரண்டு, மூன்று மாதங்களுக்கு பெய்ய வேண்டிய மழை வெறும் 24 மணி நேரத்தில் பெய்ததால் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. நீரின் அளவு மிக அதிகமாகவே இருக்கிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

பலியானோரின் உடலைச் சுமந்து வரும் மீட்புப் படையினர்.

முக்கியப் பிரச்னை என்னவென்றால் பல இடங்களில் இன்னும் வெள்ளம் வடியவில்லை. பெரிய டிரக்குகளைக் கூட அந்த இடங்களுக்குக் கொண்டு செல்ல முடியவில்லை” எனக் கூறினார்.

மேலும், வரும் காலங்களில் பெரிய அளவிலான வெள்ள பாதிப்புகளை சமாளிக்கும் வகையில் வெள்ளக் கட்டுப்பாட்டுத் திட்டப் பணிகளைச் செயல்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிக்க | பிராந்தியப் போரின் விளிம்பில் மத்தியக் கிழக்கு

புயல் வீசும் பகுதிகளில் 42 லட்சம் மக்கள் வரை வசிப்பதாகவும், அதில் கிட்டத்தட்ட 5 லட்சம் மக்கள் பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் பிலிப்பின்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

இந்தப் புயல் அதன் திசையில் இருந்து விலகாவிட்டால் வாரயிறுதியில் வியட்நாமைத் தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பிலிப்பின்ஸ் வடக்குத் தீவான லூசானில் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றிற்கு மூன்று நாள்களுக்கும் மேலாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தீவுகளுக்கு இடையேயான போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பல இடங்களில் மழை நின்றதால் மீட்புப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வெள்ளத்தில் மூழ்கிய குடியிருப்புப் பகுதிகள்.

பசிபிக் பெருங்கடலுக்கும் தென் சீனக் கடலுக்கும் இடையில் அமைந்துள்ள தென்கிழக்கு ஆசிய தீவுக்கூட்டமான பிலிப்பின்ஸை ஆண்டுதோறும் சுமார் 20 புயல்கள் மற்றும் சூறாவளிகள் தாக்குகின்றன.

கடந்த 2013 ஆம் ஆண்டில், பதிவுசெய்யப்பட்ட வெப்பமண்டல புயல்களில் ஒன்றான ஹையான், 7,300 க்கும் மேற்பட்ட மக்களின் உயிரைப் பறித்து பல கிராமங்களைத் தரைமட்டமாக்கியது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *