* பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியானதில் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி.
* மறுகூட்டலுக்கு 11-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
* மாணவ-மாணவிகளுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து.
* சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண்கள் பெற்றார்.
தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 1.03.2024 முதல் 22.03.2024 வரை நடைபெற்றது. மொத்தம் 7,60,606 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 4,08,440 பேர் மாணவிகள், 3,52,165 பேர் மாணவர்கள், ஒருவர் மட்டும் மூன்றாம் பாலினத்தவர் ஆவார்.
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு
இந்த நிலையில் இன்று(6ந்தேதி) பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் மொத்தம் 7,19,196 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இது 94.56 சதவீதம் தேர்ச்சி ஆகும். வழக்கம்போல் மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தன்.
மாணவிகள் 3,93,890 பேர் என 96.44 சதவீதம் மற்றும் மாணவர்கள் 3,25,305 பேர் என 92.37 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்வு எழுதிய மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் தேர்ச்சி அடைந்தார். மாணவர்களை விட 4.07 சதவீதம் மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
மறுகூட்டல்
இந்த நிலையில் விடைத்தாளில் கூடுதல் மதிப்பெண் கிடைக்கும் என்று எதிர்பார்க்கும் மாணவ, மாணவிகள் நாளை(7ந்தேதி) முதல் வருகிற 11ம் தேதி வரை மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்கலாம் -என்று தேர்வு துறை அறிவித்து உள்ளது.
மு.க.ஸ்டாலின் வாழ்த்து
தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் அனைவருக்கும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–
பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! உயர்கல்வியில் சிறந்து விளங்கி, தலைசிறந்த பொறுப்புகளில் நீங்கள் மிளிர வேண்டும்!
இம்முறை குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம். அடுத்து காத்திருக்கும் வாய்ப்புகள் உங்கள் முன்னேற்றத்துக்கான துணையாக அமையும் என்ற நம்பிக்கையுடன் முன்னே செல்லுங்கள்!.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவர்
இதற்கிடையே நாங்குநேரியில் சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவர் சின்னதுரை பிளஸ்&2 பொதுத்தேர்வில் 469 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
அந்த மாணவரை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடர்புகொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து உள்ளார்.
ஏற்கனவே அவர் கடந்த 11.08.2023 அன்று உறுதியளித்தபடி மாணவர் சின்னத்துரை விரும்பும் கல்லூரியில் சேர்வதற்கு உதவுவதாகவும், அவரின் உயர் கல்விக்கு அனைத்து வகையிலும் துணை நிற்பதாகவும் அமைச்சர் உறுதி அளித்து உள்ளார்.
பிளஸ்-2 ரிசல்ட் பார்க்க https://tnresults.nic.in/