நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில், இரண்டு மாணவர்கள் எழுதிய மூன்று பாடங்களின் விடைத்தாள்களை மாற்றியதாக சிபி-சிஐடி காவல்துறையினர் ஒன்பது பேரை கைது செய்துள்ளனர்.
இது குறித்து சிபி-சிஐடி தரப்பில் கூறப்படுவதாவது, மதுரை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் இரண்டு பேர், மேலூர் அரசுப் பள்ளி ஆசிரியர், ஆய்வுக்கூட உதவியாளர், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஒரு மாணவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருக்கும் இன்னொரு மாணவரைத் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.
முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்கள் இருவருமே, மதுரையில் உள்ள ஒரே தனியார் பள்ளியைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில், இந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடந்தபோது, இரண்டு விடைத்தாள்களில் கையெழுத்து ஒன்றுபோல இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. அதாவது, இரண்டு மாணவர்கள் எழுதிய கணிதவியல், இயற்பியல், வேதியியல் ஆகிய மூன்று பாடப்பிரிவுகளின் விடைத்தாள்களும் ஒரே கையெழுத்தில் இருந்துள்ளது. இதையடுத்து இரண்டு மாணவர்களுக்கும் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு மதிப்பெண் சான்றிதழ்கள் ரத்து செய்யப்பட்டன.
இதனை எதிர்த்து, ஒரு மாணவரின் பெற்றோர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையை நாடினார். மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த சம்பவத்தில், முறைப்படி முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு, பிறகு, இந்த வழக்கு சிபி-சிஐடிக்கு மாற்றப்பட்டது.
விசாரணையின்போது, பெற்றோர் மற்றும் பள்ளி ஆசிரியர் உள்பட, கல்வித்துறை அதிகாரிகள் சேர்ந்து, இரண்டு மாணவர்களின் விடைத்தாள்களை மாற்றியதும், ஒவ்வொரு விடைத்தாளுக்கும் பெற்றோரிடமிருந்து தலா ரூ.1 லட்சம் பெற்றுக்கொண்டதும் தெரிய வந்துள்ளது. விடைத்தாள்களில் இருந்த கையெழுத்து, அரசு ஊழியர்களில் ஒருவரின் கையெழுத்துடன் ஒத்துப்போனதையடுத்து, ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.