“பிளாக்மெயில் செய்கிறது மத்திய அரசு” – தேசிய கல்விக் கொள்கை பாதிப்புகளை பட்டியலிட்டு அன்பில் மகேஸ் சாடல் | What are the impacts of the NEP and PM Shri schemes explained by TN Minister Anbil Mahesh

1351694.jpg
Spread the love

திருச்சி: “புதியக் கல்விக் கொள்கை, பி.எம் ஸ்ரீ திட்டங்களில் கையெழுத்திட்டால்தான் கல்விக்கான நிதியை ஒதுக்குவேன் என மத்திய அரசு பிளாக் மெயில் செய்கிறது” என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி குற்றம்சாட்டினர். அத்துடன் தேசிய கல்விக் கொள்கையின் பாதிப்புகளையும் அவர் பட்டியலிட்டார்.

தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சியில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: “பி.எம் ஸ்ரீ பள்ளித்திட்டத்தை ஒப்புக் கொண்டால்தான், தமிழகத்துக்கு கல்விக்காக தர வேண்டிய ரூ.2,152 கோடி நிதியை வழங்குவதாக மத்திய அரசு கட்டாயப்படுத்துகிறது. இத்திட்டத்தின் மூலம் தரமான கல்வியை வழங்கப்போவதாக மத்திய அரசு கூறுகிறது. தமிழகம் ஏற்கெனவே தரமான கல்வியைத்தான் வழங்கிக் கொண்டிருக்கிறது.

பிஎம் ஸ்ரீ பள்ளித் திட்டத்தின் மூலம் புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கொண்டுவருவதை தெரிந்து கொண்டோம். குறிப்பாக, மும்மொழிக் கொள்கை தொடர்பான ஷரத்து, 3, 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முறை, உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன. இதனால் மாணவர்களின் இடைநிற்றலை அதிகரிக்கும் எனக் கூறினோம். இந்தியாவிலேயே, அதிகளவில் இடைநிற்றல் இல்லாத ஒரு மாநிலமாக தமிழகத்தை மாற்றி வருவதாக கூறினோம்.

ஆட்சி மாற்றத்தின்போது 16 சதவீதமாக இருந்த இடைநிற்றலை, 5 சதவீதமாக கொண்டு வந்திருக்கிறோம். முதல்வர், துணை முதல்வர், தோழமைக் கட்சிகள், மக்கள் கோலமிட்டு மத்திய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். மத்திய அரசு மீண்டும் ஒரு மொழிப்போரைக் கொண்டுவரக் கூடாது என்ற வகையில், தமிழக அரசின் கண்டனத்தை தெரிவித்தோம். இன்றைக்கு மத்திய கல்வி அமைச்சர் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

அந்தக் கடிதத்தில், தமிழின் பெருமையை நாங்களும் முன்னெடுத்து வருகிறோம். பிரதமரும் பல்வேறு முன்னெடுப்புகளையும் செய்து வருகிறார் என்று பல்வேறு செய்திகளை கூறியிருக்கிறார். கடிதத்தின் இறுதியில், மத்திய அரசின் கோரிக்கையை ஒப்புக்கொண்டு கையெழுதிடுங்கள். இளைய சமூகத்தை மனதில் வைத்துதான் நாங்கள் இதை வடிவமைத்திருக்கிறோம் என்று கூறியிருக்கிறார். இளைய சமூகத்தை மனதில் நிறுத்தி இதை செய்திருந்தால், அதற்கென நிபந்தனைகளை விதிக்கக் கூடாது.

இருமொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டு தமிழகத்தில் கல்வி கற்றுள்ள மாணவர்கள், பல்வேறு துறைகளில் சாதித்து உயர்ந்து நிற்கிறார்கள். இஸ்ரோ உள்பட, மருத்துவம், பொறியியல் என இன்று சாதித்தவர்கள் அனைவருமே இருமொழியை ஏற்று படித்தவர்கள்தான். புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்கும் முன்பாக, இந்தியாவில் கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலத்தின் சார்பில் ஒரு பிரதிநிதியை அழைத்து கலந்தாலோசித்திருந்தால், சரியாக இருந்திருக்கும். ஆனால், இதை எதையும் செய்யாமல், அவர்களாகவே ஒரு திட்டத்தை உருவாக்கியுள்ளனர். பிறகு கண்டனம் வரும்போது, மத்திய அரசு இறங்கி வந்து கடிதம் எழுதுவது, தூண்டில் போட்டுவிட்டு, அதில் மீன் ஏதாவது சிக்காதா என்று பார்ப்பது போல் இருக்கிறது மத்திய அமைச்சரின் கடிதம்” என்றார்.

மேலும், “புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்தால் என்னென்ன நடைமுறை சிக்கல்கள் இருக்கும் என்பதை 12 அம்சங்களாக தெரிவிக்கிறேன்” என்று பாரம்பரிய மொழி அடையாளத்துக்கான அர்ப்பணிப்பு, கல்வியில் மாநில சுயாட்சி, இரு மொழிக் கொள்கையின் கல்வி வெற்றி, மொழி திணிப்புக்கு எதிர்ப்பு, நடைமுறை சவால்கள், மாணவர்களின் அறிவாற்றல் சுமை, தன்னார்வ மொழி கற்றல் மாற்று, பன்மொழி நாட்டில் சமதூர கொள்கை, மத்திய முன்னுதாரண ஆதரவு, அரசியல் ஒருமித்த ஆதரவு, பாதகமின்மையின் சான்று, கூட்டாட்சி ஒத்துழைப்பு வேண்டுகோள் ஆகிய தலைப்புகளில் நீண்ட விளக்கம் அளித்தார்.

“இந்த அம்சங்கள் தமிழக வரலாற்றின் உறுதிப்பாடு. நடைமுறை சாதனைகள், அரசியல் அமைப்பு உரிமைகளை வலியுறுத்தி இந்தியாவின் கூட்டாட்சி அமைப்புக்குள் பரஸ்பரம் மரியாதையை வேண்டுகிறது என்ற விளக்கத்தை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மாநில மொழியான ஒரியா மொழி உள்பட 56 மொழிகள் இந்தி மொழியால் விழுங்கப்பட்டுள்ளது. இந்தித் திணிப்பால் அந்த மொழிகள் அழிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நிலை தாய்மொழி தமிழக்கும் வந்துவிடக்கூடாது என்பதற்காக உலக தாய்மொழி தினமான இன்று இந்த விளக்கத்தை சொல்லி இருக்கிறேன்.

பல்வேறு மாநில அதிகாரிகளிடம் பேசும்போது, மும்மொழிக் கொள்கை, 3, 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் எனவே NEP-யை ஏற்றுக் கொண்டால், வரலாறு மாற்றப்படும், நல்லத்தலைவர்களை கெட்டவர்களாகவும், கெட்டவர்களாக இருப்பவர்களை நல்லவர்களாக, தியாகிகளாக காட்டுவார்கள். இந்த வடிவமைப்பில் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே நுழையும்.

இதை உள்ளே நுழைய விடாமல் தமிழக முதல்வர் இருப்பதால், இல்லாத கட்டுப்பாடுகளை போட்டு, விவாதப்பொருளாக இருக்கும் கட்டுப்பாடுகளை கையில் வைத்துக் கொண்டு இதில் கையெழுத்திட்டால் தான் பணம் தருவேன் என்றுக் கூறாமல், உடனடியாக தமிழகத்துக்கான நிதியை விடுவிக்க வேண்டும் என பிரமதருக்கு, தமிழக முதல்வர் கடிதம் எழுதி உள்ளார். அது வெறும் கடிதம், காகிதம் என்று பார்க்காமல், 43 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது என்பதை உணர்ந்து மத்திய அரசு நிதியை வழங்க வேண்டும்.

மத்திய அரசு பிளாக்மெயில் செய்வதை நிறுத்த வேண்டும். 2023-ம் ஆண்டு கடைசி தவணையிலிருந்து தான் பிஎம் ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட வேண்டும் என்றனர். பிஎம் ஸ்ரீ பள்ளித்திட்டத்தில் குறித்து ஆராயும் போது அதில் புதிய கல்வித் கொள்கைகள் புகுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்தபோது எதுவுமே சொல்லாமல், பிஎம் ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்துப்போட்டு பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்வது, பேரம் பேசுவதை கடந்து அதை பிளாக்மெயிலாகத்தான் பார்க்க முடிகிறது.

எப்போதும் மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை வழங்க வேண்டும். மீண்டும் ஒரு மொழிப்போர் உருவாக மத்திய அரசு காரணமாக இருக்கக் கூடாது. இளைய சமுதாயத்தை மனதில் வைத்து புதிய கல்விக் கொள்கை, பி.எம்ஸ்ரீ பள்ளி போன்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளோம் எனும் மத்திய அமைச்சரின் கருத்து ஏற்கும்படியாக இல்லை” என்றார் அமைச்சர் அன்பில் மகேஸ்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *