கோவில்பட்டி: தீப்பெட்டி தொழிலுக்கு சவாலாக உள்ள ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் லைட்டர்களை தடை செய்ய மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுப்போம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்தார்.
மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சார பயணத்துக்காக நேற்றிரரவு அதிமுக பொதுச்செயலாளர் கோவில்பட்டிக்கு வந்தார். தொடர்ந்து இன்று காலை அருள்தரும் செண்பகவல்லி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் தனியார் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் கடலை மிட்டாய் உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடினார்.
மாவட்டம் உருவாக்க வேண்டும்: அப்போது நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் எம்.பரமசிவம் பேசும்போது, மாவட்ட தலைநகருக்கான அனைத்து தகுகளையும் கொண்ட கோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு மாவட்டம் உருவாக்க வேண்டும். தீப்பெட்டி தொழிலுக்கு அச்சுறுத்தலாக உள்ள ஒரு முறை பயன்படுத்தக்கூடிய லைட்டர்களை தடை செய்ய வேண்டும் என தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகிறோம். தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்து 6 மாதங்களாகியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் அதிமுக ஆட்சியின் போது நாங்கள் வைத்த கோரிக்கைகள் எதுவாயினும் ஒரே நாளில் நிறைவேற்றி கொடுக்கப்பட்டது. எனவே ஒரு முறை பயன்படுத்தக்கூடிய லைட்டர்களை இந்தியா முழுவதும் தடை செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார் அவர்.
சத்துணவில் கடலைமிட்டாய்: கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் கே.கண்ணன் பேசுகையில், “கோவில்பட்டியின் அடையாளமாக உள்ள கடலை மிட்டாய்க்கு அதிமுக ஆட்சியில் தான் புவிசார் குறியீடு பெற்று தரப்பட்டது. ஆனால், பிற இடங்களில் உற்பத்தி செய்யப்படும் கடலை மிட்டாய்களுக்கும் கோவில்பட்டி கடலை மிட்டாய் என பெயரிடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக புரதச்சத்து கொண்ட கடலைமிட்டாயை சத்துணவு திட்டத்தில் இணைத்து வாரம் இருமுறை பள்ளி குழந்தைகளுக்கு கடலை மிட்டாய் கொடுக்க அதிமுக ஆட்சி அமைந்தவுடன் முதல் கையெழுத்திட வேண்டும்”, என்றார்.
தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: சிறு குறு தொழில்களில்தான் அதிகமானோருக்கு வேலை கிடைக்கும் என்ற அடிப்படையில் அதிமுக ஆட்சியின்போது சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு அதிக சலுகைகளும். வசதிகளும் செய்து தரப்பட்டன. அதிமுக ஆட்சியின் போது தீப்பெட்டிக்கு விதிக்கப்பட்டிருந்த 18 சதவீத ஜிஎஸ்டி வரியை 12 சதவீதமாக குறைக்க மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுத்தோம்.
இப்போது தீப்பெட்டி தொழிலுக்கு நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது.. தீப்பெட்டி தொழிலுக்கு சவாலாக உள்ள லைட்டர்களை தடை செய்ய வேண்டும். இதற்காக அதிமுக சார்பில் சட்டமன்றத்தில் தனி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தோம். ஆனால் திமுக அரசு எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று உள்ளதாக தெரிவித்தனர். நாங்களும் மத்திய அரசை தொடர்பு கொண்டு பிளாஸ்டிக் லைட்டர்களை தடை செய்ய தேவையான முயற்சிகளை மேற்கொள்வோம்.
கடலை மிட்டாய்க்கு பெயர் பெற்ற ஊர் கோவில்பட்டி. விவசாயமும் விவசாயம் சார்ந்த தொழில்கள் செழித்தால் தான் உற்பத்தியாளர்கள் தயாரிக்கின்ற பொருளை மக்கள் விரும்பி வாங்குவார்கள். தாமிரபரணி – வைப்பார் திட்டம் அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு நில கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த ஆட்சி வந்ததும் அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. அந்த் திட்டம் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தொடங்கப்படும். அப்போது இப்பகுதி செழுமையாக இருக்கும். விவசாய விளைபொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்க அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தீப்பெட்டி மற்றும் கடலை மிட்டாய் உற்பத்தி தொழில் சிறக்க அதிமுக என்றும் துணை நிற்கும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியின் போது வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கடம்பூர் செ.ராஜூ வரவேற்றார். முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார் சி.விஜயபாஸ்கர்.தளவாய் சுந்தரம், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் காஞ்சி பன்னீர்செல்வம் மற்றும் தீப்பெட்டி, கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஐக்கிய கிறிஸ்தவ பேரவையை சேர்ந்தவர்கள், திருநெல்வேலி தெட்சிண மாற நாடார் சங்க நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் சந்தித்தனர். அதேபோல் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் தங்களது கோரிக்கை மனுக்களையும் வழங்கினர்.