‘பிள்ளையார் முன்பு சத்தியம் செய்வாரா?’ – வைத்திலிங்கத்தை வம்புக்கு இழுக்கும் மல்லாடி கிருஷ்ணாராவ் | Vaithilingam vs Malladi Krishnarao

1380132
Spread the love

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஏனாம் தொகுதியில் ஒரு காலத்தில் காங்கிரஸின் முகமாக இருந்தவர் மல்லாடி கிருஷ்ணாராவ். வைத்திலிங்கம் மற்றும் நாராயணசாமி முதல்வராக இருந்த காலங்களில் முக்கிய துறைகளுக்கு அமைச்சராகவும் கோலோச்சிய மல்லாடி, தெலுங்கு லாபி மூலம் டெல்லி வரைக்கும் சென்று காரியம் சாதிக்கத் தெரிந்தவர்.

இப்படிப்பட்டவர், கடந்த காங்கிரஸ் ஆட்சியின் முடிவில் காங்கிரஸைவிட்டு விலகி என்.ஆர்.காங்கிரஸில் சேர்ந்தார். இவர் கட்சி மாறியதால் 2021 சட்டப் பேரவைத் தேர்தலில் ஏனாமில் போட்டியிட காங்கிரஸுக்கு ஆளே இல்லாமல் போனது. அதனால் அங்கு காங்கிரஸ் போட்டியிடவே இல்லை.

அதேசமயம், மல்லாடி கிருஷ்ணாராவும் அங்கு போட்டியிடாமல் ரங்கசாமியை போட்டியிட வைத்தார். அப்போது தட்டாஞ்சாவடி, ஏனாம் என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட ரங்கசாமி, ஏனாமில் தோற்றுப் போனார். என்றாலும் மல்லாடி கிருஷ்ணாராவை புதுச்சேரி அரசின் டெல்லி பிரதிநிதியாக அமர்த்த சிபாரிசு செய்தார் ரங்கசாமி.

இந்த சூழலில் கடந்த முறையைப் போல் இல்லாமல் தற்போது ஏனாமில் களமிறங்க காய்நகர்த்துகிறது காங்கிரஸ். இது தொடர்பாக அண்மையில் அங்கு நடந்த காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., “ஏனாம் மக்களுக்கு மல்லாடி வேண்டாம். கமிஷனை மட்டுமே குறிக்கோளாக வைத்து அவர் செயல்படுவார். வெள்ளத்தடுப்புச் சுவர் அமைப்பதில் தனியார் நிறுவனத்திடம் சிஎஸ்ஆர் நிதியில் கமிஷன் பார்த்தவர். அவரால்தான் ஏனாம் வளர்ச்சியடையவில்லை” என்று மல்லாடிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

இதற்கு பதிலடி கொடுத்த மல்லாடி கிருஷ்ணாராவ், “நேர்மை பற்றி பேச வைத்திலிங்கத்துக்கு தகுதியில்லை. கமிஷன் வாங்கியது நீங்களா… நானா என விவாதம் செய்யலாமா? நான் கலால் துறை அமைச்சராக இருந்தபோது தொழிற்சாலைகளிடம் இருந்து மாதம்தோறும் கமிஷன் வாங்கியது யார் என்பதை நிரூபிக்கத் தயாராக இருக்கிறேன். நான் கமிஷன் வாங்கவில்லை என்று பிள்ளையார் கோயில் முன்பு சத்தியம் செய்யத் தயார்; நீங்கள் தயாரா?” என்று வைத்திலிங்கத்தை கோதாவுக்கு வரச்சொல்லி இழுத்தார்.

ஒரு காலத்தில் காங்கிரஸில் இருந்த முன்னாள் அமைச்சரான மல்லாடி, அந்தக் கட்சியின் மாநில தலைவரான வைத்திலிங்கத்தை இப்படி விமர்சித்தது காங்கிரஸ்காரர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது. புதுச்சேரியில் உள்ள எம்.பி. அலுவலகத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள், எம்எல்ஏ வைத்தியநாதன் உள்ளிட்டோர் இதுகுறித்து விவாதம் நடத்தியதாகச் சொல்லப்படும் நிலையில் வைத்தியநாதனிடம் பேசினோம்.

“நாங்கள் எந்த விசாரணைக்கும் தயாராக இருக்கிறோம். மல்லாடி கார்ப்பரேட்களுக்குத்தான் வேலை செய்வார்; மக்களுக்கு அல்ல. மல்லாடி சொத்துக் கணக்கையும் வைத்திலிங்கம் சொத்துக் கணக்கையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே இது தெரிந்துவிடும்” என்று சொன்னார்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸை ஜெயிக்க வைக்க வைத்திலிங்கம் தீவிரம் காட்டி வரும் நிலையில், ஆந்திர லாபியில் கரைகண்ட மல்லாடி கிருஷ்ணாராவ், அடுத்ததாக டெல்லி வரைக்கும் இந்த கமிஷன் விவகாரங்களை எடுத்துச் சென்று குடைச்சல் கொடுத்தாலும் கொடுப்பார் என்கிறார்கள் அவரது கடந்த காலத்தை படித்த புதுச்சேரி அரசியல்வாதிகள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *