சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் மூலம் காலிஸ்தான் ஆதரவாளர்களை இந்தியா குறிவைப்பதாக கனடா காவல்துறை குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது.
காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியத் தூதருக்கு தொடர்பிருப்பதாக கனடா குற்றம்சாட்டியிருந்த நிலையில், கனடாவுக்கான தூதரை இந்தியா திரும்ப பெறுவதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை அறிவித்தது.
மேலும், எங்கள் தூதர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தற்போதைய கனடா அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மீது நம்பிக்கை இல்லை என்றும் கனடாவின் மீது நம்பிக்கை இழந்துவிட்டோம் எனவும் குறிப்பிட்டுள்ளது.
கனடா காவல்துறை குற்றச்சாட்டு
இந்திய தூதர்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ள நிலையில், சிறையில் இருக்கும் பிஷ்னோய் கும்பலுடன் இந்திய அதிகாரிகளை தொடர்புபடுத்தி கனடா காவல்துறை குற்றம்சாட்டியுள்ளது.
கனடா காவல்துறை துணை ஆணையர்களின் ஒருவரான பிரிஜிட் கெளவின் செய்தியாளர்களுடன் பேசியதாவது:
“காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் ஆதரவாளர்களை குறிவைக்க லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை இந்திய அரசு பயன்படுத்துகிறது. இந்த குற்ற கும்பலுக்கும் இந்திய தூதரக அதிகாரிகளுக்கும் தொடர்பு உண்டு” எனத் தெரிவித்துள்ளார்.
கனடா காவல்துறை அதிகாரியின் இந்த குற்றச்சாட்டு, இந்தியா – கனடா இடையேயான தூதரக உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க : நிஜ்ஜாா் கொலை வழக்கு: கனடா மீண்டும் குற்றச்சாட்டு! தூதரை திரும்ப அழைக்க இந்தியா முடிவு!
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் 2023 ஜூன் மாதம் கனடாவில் கொல்லப்பட்டார். இதில், இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியிருந்தார். இதனை இந்தியா மறுத்து வருகிறது. இதனால், இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் அதிகரித்து வருகிறது.
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மாவுக்கு தொடர்புள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருந்தார். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.