பிஹார் தேர்தல் பிரச்சாரத்தின் போது பிஹார் மக்களை தமிழகத்தில் திமுகவினர் துன்புறுத்துவதாக பிரதமர் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையானது. இதையடுத்து, இல்லாத ஒன்றை தமிழக மக்களுக்கு எதிராக மோடி பேசிவிட்டார் எனக்கூறி, திமுக கூட்டணி கட்சிகள்மோடிக்கு கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த வியாழக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில், “கத்தி, வீச்சரிவாள் வைத்திருக்கும் அன்புமணி கும்பல் எப்போது துப்பாக்கி ஏந்துவார்கள் எனத் தெரியவில்லை. பிஹாரில் இருந்து வந்து நிறையப் பேர் இங்கு வேலை செய்கின்றனர். பிஹாரிகள் துப்பாக்கி வைத்திருப்பார்கள். துப்பாக்கி கிடைக்கட்டும்” எனத் தெரிவித்தார். இதுவும் இப்போது சர்ச்சையாகி இருக்கிறது.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் மாவட்ட செயலாளர் சவுரிராஜன் கூறும்போது, “அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல் அனைவரையும் ராமதாஸ் சந்தேகிக்கிறார். குடும்ப உறுப்பினர்கள் மீதான அதிருப்தி காரணமாக, வெளி மாநிலத்தில் இருந்து தமிழகம் வந்துள்ள தொழிலாளர்கள் மீது ராமதாஸ் வீண் பழியைப் போடுவது பொருத்தமற்றது.
அவருக்கு அவரது குடும்பத்தினர் மீது இயல்பாகவே பயம் வந்துள்ளது. அதன் வெளிப்பாடுதான் பிஹாரில் இருந்து வந்துள்ளவர்கள் துப்பாக்கி வைத்திருப்பார்கள் எனக் கூறியுள்ளார். கார்ல் மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் கொள்கைகளை உள்வாங்கி இருக்கும் ராமதாஸுக்கு இப்படியான மனநிலை வந்திருக்கக் கூடாது” என்றார்.