திருச்சி: “பிஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதற்கு எஸ்.ஐ.ஆர் ஒரு காரணம்தான். திட்டமிட்டு எஸ்.ஐ.ஆர் மூலம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டிலும் வாக்காளர்கள் நீக்கப்படுவார்களா என்கிற அச்சம் உள்ளது” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “பிஹாரில் நிதிஷ் குமார் தனது பெயரை கெடுத்துக் கொள்ளவில்லை. எஸ்.ஐ.ஆர் மூலம் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். இன்னும் 5 மாதங்கள் தமிழ்நாட்டில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், பிஹார் தேர்தல் முடிவுகள் தாக்கத்தை ஏற்படுத்துமா, ஆக்கத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சியை அடியொடு ஒழிக்க வேண்டும். காங்கிரஸ் தோல்வியடைவது எனக்கு மகிழ்ச்சிதான். தமிழ்நாட்டில் காமராஜர் மறைவுக்குப் பின்பு காங்கிரஸ் கட்சி அழிந்துவிட்டது. தற்போது இருப்பது ஒரு கம்பெனி தான். திராவிட கட்சிகளின் தோள்களில் ஏறிக்கொண்டுதான் காங்கிரஸும், பாஜகவும் வசதியாக பயணம் செய்கின்றன. தமிழ்நாட்டில் காங்கிரஸ், பாஜகவுக்கு என்ன வேலை இருக்கிறது? தேசிய கட்சிகள் எந்த மாநிலத்திற்கும் தேவை இல்லை. தனியாருக்கு தாரை வார்க்கும் பணியைத்தான் தேசிய கட்சிகள் செய்து வருகின்றன. இவர்கள் தலைவர்களா, தரகர்களா என்ற கேள்வி எழுகிறது.
பிஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதற்கு எஸ்.ஐ.ஆர் ஒரு காரணம்தான். திட்டமிட்டு எஸ்.ஐ.ஆர் மூலம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டிலும் வாக்காளர்கள் நீக்கப்படுவார்களா என்கிற அச்சம் உள்ளது. எஸ்.ஐ.ஆரை அதிமுகவின் எஜமானர்களான பாஜகவினர் கொண்டு வந்ததால் அதை, அதிமுகவினர் ஆதரிக்கிறார்கள். எஸ்.ஐ.ஆரை எதிர்ப்பதுபோல காட்டிக் கொள்ளும் திமுக அரசு, எஸ்.ஐ.ஆரை செயல்படுத்தும் பணியில் கவனம் செலுத்துகிறது.
எஸ்.ஐ.ஆரை எதிர்ப்பதாக கூறும் திமுக சட்டப்பேரவையை கூட்டி, அதை அறிவிக்க வேண்டும். பி.எல்.ஓக்களுக்கே படிவங்களை நிரப்ப தெரியவில்லை. பிஹாரில் அதிகளவு இஸ்லாமியர்கள் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது. அதே வேலையை பாஜக தமிழ்நாட்டிலும் செய்ய வாய்ப்புள்ளது. தூய்மைப் பணியை தனியார் முதலாளிகளுக்கு ஒப்பந்தம் விட்டுவிட்டு, தூய்மைப் பணியாளர்களுக்கு நிரந்தர வேலை தராமல் 3 வேலை உணவுக் கொடுப்பது, அவர்களை சமாதானப்படுத்தத்தான்” என்று சீமான் கூறினார்.