பிஹாரை போல ‘SIR’ மூலம் வாக்குரிமையை பறிக்க முயன்றால் … மத்திய அரசுக்கு திமுக எச்சரிக்கை! | TN will fight against SIR like vote chori efforts: DMK

1379089
Spread the love

சென்னை: “பிஹாரைப் போலத் தற்போது SIR என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சதித் திட்டம் ஏதேனும் செயல்படுத்த ஒன்றிய பாஜக அரசு முயன்றால், அதற்கு எதிராக முதல்வர் தலைமையில் தமிழ்நாடு ஒன்று சேர்ந்து போராடும்.” என திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: SIR என்ற வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை அனைத்து மாநிலங்களிலும் விரைவில் செயல்படுத்தப்படும் எனத் தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்திருக்கிறார். இண்டியா கூட்டணி சார்பில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாக்காளர் பட்டியல் முறைகேடு தொடர்பாக ஆதாரங்களோடு தொடர்ந்து எழுப்பிய கேள்விகளுக்குத் தேர்தல் ஆணையம் இதுவரை உரிய பதிலை அளிக்கவில்லை.

ஆட்சிகளை மாற்றுவது, அமைப்பது ஜனநாயகத்தின் இறுதி எஜமானர்களான வாக்காளர்களின் உரிமை. அதனைத் தேர்தல் ஆணையம் கையில் எடுப்பது, ஒன்றிய அரசுக்கு ஆதரவாகச் செயல்படுவது ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைப்பதற்குச் சமம். அந்தச் செயலை தமிழ்நாடு நிச்சயம் அனுமதிக்காது.

பிஹாரைப் போலத் தற்போது SIR என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சதித் திட்டம் ஏதேனும் செயல்படுத்த ஒன்றிய பாஜக அரசு முயன்றால், அதற்கு எதிராக முதல்வர் தலைமையில் தமிழ்நாடு ஒன்று சேர்ந்து போராடும். தமிழ்நாட்டு மக்களை நேர் நின்று வீழ்த்த முடியாத எதிரிகளும் துரோகிகளும் குறுக்கு வழியைக் கையாண்டு வென்றிடலாம் எனப் பகல் கனவு காண்கிறார்கள். அதற்குத் தமிழர்கள் தக்கப் பதிலடி கொடுப்பார்கள். SIR என்ற அநீதிக்கு எதிராகத் தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும்.

மோடி அரசு அமைந்த பிறகு தன்னாட்சி அதிகாரங்கள் கொண்ட சிபிஐ, ஆர்பிஐ, சிஏஜி, என்ஐஏ, வருமானவரித் துறை, அமலாக்கத் துறை, நிதி ஆயோக் அமைப்புகள் ஒன்றிய அரசின் கைப்பாவையாக மாறின. இந்த வரிசையில் தேர்தல் ஆணையமும் ஒன்றிய அரசின் கண் அசைவுக்கு ஏற்ப நடக்க ஆரம்பித்திருக்கிறது.

தேர்தல் ஆணையம் தன் நடுநிலை தன்மையை இழந்துவிட்டதற்குத் தொடர்ச்சியாக நிறைய நிகழ்வுகள் நடந்து வருகின்றன. உதாரணமாக ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால், கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் தேதி முன்கூட்டியே பிரதமர் மோடிக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் முதல் கட்ட தேர்தல் நடந்த தமிழ்நாட்டில் பல்லடம், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, சென்னை, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் முன்னரே பிரச்சாரக் கூட்டங்களை நடத்திவிட்டு போனார் பிரதமர் மோடி. இதன் மூலம் தேர்தல் தேதி ரகசியத்தைத் தேர்தல் ஆணையம் காக்கத் தவறியது அப்பட்டமாகவே வெளிப்பட்டது.

பிஹாரில் சுமார் 8 கோடி வாக்காளர்கள் உள்ளனர். SIR என்ற பெயரில் தேர்தல் ஆணையம் பல லட்சம் வாக்காளர்களை நீக்கியது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உச்ச நீதிமன்றமே கண்டித்தது. பிஹார் வாக்காளர் பட்டியலிலிருந்து முதலில் 65 லட்சம் பேரைத் தேர்தல் ஆணையம் நீக்கியது. அடுத்து 3.7 லட்சம் பேரை நீக்கினார்கள். இஸ்லாமியர்கள், பட்டியல் சமூகத்தினர், பெண்கள் என்று குறிவைத்து இந்த நீக்கம் நடந்தன.

இப்போது புதிதாக 21 இலட்சம் பேரை வாக்காளர் பட்டியலில் இணைத்திருக்கிறது தேர்தல் ஆணையம். நீக்கப்பட்ட 3.7 லட்சம் பேரின் விவரங்களைச் சமர்ப்பிக்குமாறும், புதிதாகச் சேர்க்கப்பட்ட 21 இலட்சம் பேரும் முன்பு நீக்கப்பட்ட வாக்காளர்களா? அல்லது புதிய வாக்காளர்களா? என்ற விவரங்களை அளிக்குமாறும் தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் கேட்டிருக்கிறது.

தேர்தல் ஆணையத்தை நோக்கி உச்ச நீதிமன்றத்தின் கேள்விகள், SIR மேற்கொள்வதில் தேர்தல் ஆணையத்திடம் உள்ள நேர்மையின்மையை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

பிஹாரில் ஒரே தொகுதியில் 80,000 இஸ்லாமியர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்க முயற்சி நடந்ததாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் குற்றம்சாட்டினார். பாஜக கூட்டணியில் இருக்கும் ஒன்றிய அமைச்சர் சிராக் பாஸ்வானின் சொந்தத் தொகுதியிலேயே 80 சதவிகித பட்டியல் சமூகத்தினரிடம் தேர்தல் ஆணையம் கேட்கும் ஆவணங்கள் இல்லை. பாஜகவுக்கு எதிராக வாக்களிக்கும் இஸ்லாமியர்கள். பட்டியல் வகுப்பினர் உள்ளிட்டவர்களின் வாக்குகளைப் பறிப்பதே SIR-ன் நோக்கம் என்பது அப்பட்டமாக வெளிப்படுகிறது.

பிஹாரில் பல லட்சக்கணக்கானவர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து ஏன் நீக்கினார்கள்? அதிலிருந்து சில லட்சக்கணக்கானோரை மீண்டும் ஏன் சேர்த்தார்கள்? என்பதற்குத் தேர்தல் ஆணையம் தெளிவான பதில் அளிக்கவில்லை. ஜனநாயகத்தின் ஆணிவேரான தேர்தலை நேர்மையோடு நடத்துவதே தேர்தல் ஆணையத்தின் தலையாய பணி. ஆனால், தேர்தல்களில் தில்லுமுல்லு செய்து வெற்றியை ஈட்ட முனையும் பாஜகவின் நடவடிக்கைகளுக்குத் துணை போவதாகத் தேர்தல் ஆணையம் மாறிவிடக் கூடாது.பிஹாரில் SIR-ல் நடைபெற்றுள்ள மோசடியை ஓர் இணையப் பத்திரிகை கள ஆய்வு மூலம் வெட்ட வெளிச்சமாக்கியது.

பிஹாரில் கடைப்பிடிக்கப்பட்ட தில்லு முல்லுகளை போல தமிழ்நாட்டிலும் செயல்படுத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். கள ஆய்வு மேற்கொள்ளப்படாமலேயே நமது வாக்காளர்களை நீக்கவும் வெளி வாக்காளர்களைச் சேர்க்கவும் முயற்சிகள் நடக்கலாம். இந்தச் சதியைத் தமிழ்நாடு ஒன்று திரண்டு போராடும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *