பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே உச்சக்கட்ட மோதல் போக்கு நிலவி வருகிறது. கட்சியை கைப்பற்றும் முயற்சியில் இருதரப்பும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதில் முக்கியமாக, இருதரப்பினரும் பொதுக்குழுவை கூட்டி, தேர்தல் ஆணையத்தை அணுகினர். தேர்தல் ஆணையமோ, அன்புமணி தலைமையிலான பாமக நடத்திய பொதுக்குழுவை அங்கீகரித்து, கட்சியின் தலைவருக்கான காலத்தை 2026 ஆகஸ்ட் மாதம் வரை கால நீட்டிப்பு செய்தது. மேலும், தேர்தலின் போது ஏ மற்றும் பி படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரம் அன்புமணிக்கு வழங்கப்பட்டுள்ளது. மாம்பழம் சின்னமும் அன்புமணி தலைமையிலான பாமகவுக்கு தேர்தல் ஆணையம் வழங்கியது.
குறிப்பாக, தேர்தல் ஆணையம் வழங்கிய கடிதத்தில், 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலுக்கு மட்டுமின்றி அடுத்த மாதம் நடைபெறவுள்ள பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கும் அன்புமணி தலைமையிலான பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலுக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது.
தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருந்த பாமக, அங்கீகாரத்தை இழந்து பதிவு செய்யப்பட்ட கட்சியாக மாறியுள்ளதால், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரி தேர்தலுக்கு பிப்ரவரி மாதத்தில் தான் சின்னம் ஒதுக்கப்படும். அதனால், மாம்பழம் சின்னத்தை தக்க வைத்து கொள்வதற்காக, அடுத்த மாதம் நடைபெறவுள்ள பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதாக கூறி முன்கூட்டியே மாம்பழம் சின்னத்தை அன்புமணி தரப்பு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், கடும் அதிர்ச்சியும், கோபமும் அடைந்த ராமதாஸ், பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதாக கூறி முறைகேடாக மாம்பழம் சின்னம் பெற்றுள்ளதாக குற்றம் சாட்டினார். இதற்கிடையில், முறைகேடாக மாம்பழம் சின்னத்தை பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ் தரப்பு முறையீடு செய்துள்ளது.
இதுதொடர்பாக ராமதாஸ் தரப்பினரிடம் கேட்ட போது, “தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சியாக இருக்கும் பாமகவுக்கு, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கு பிப்ரவரியில் தான் சின்னம் ஒதுக்கப்படும். ஆனால், பிஹார் தேர்தலில் போட்டியிடுவதாக கூறி, தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் ஒத்துழைப்போடு மாம்பழம் சின்னத்தை பெற்றுள்ளனர். பாமகவுக்கு பிஹாரில் ஒரு உறுப்பினர் கூட இல்லை. அங்கு எப்படி போட்டியிடுவார்கள். தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருக்கிறோம்” என்றனர்.
அன்புமணி தரப்பினரிடம் கேட்டபோது, “தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கு சின்னம் கேட்டு எப்படியும் விண்ணப்பிக்க போகிறோம். பிஹார் தேர்தல் நடைபெறுவதால் முன்கூட்டியே விண்ணப்பித்து மாம்பழம் சின்னத்தை பெற்று இருக்கிறோம். இதில், எந்த தவறும் இல்லை. பிஹாரில் போட்டியிடுவதா, இல்லையா என்று இன்னும் முடிவு செய்யவில்லை.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுகிறோம். நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கரும்பு விவசாயி சின்னத்தில் தொடர்ந்து போட்டியிட்டு வந்தார். 2024-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலின் போது அவருக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைக்கவில்லை. அவர் முன் கூட்டியே கேட்காததால் தான் அவருக்கு அந்த சின்னம் கிடைக்காமல் போனது. அதனால், நாங்கள் முன் கூட்டியே மாம்பழம் சின்னத்தை பெற்றுள்ளோம்” என்றனர்.