பிஹார் போல தில்லுமுல்லு செய்து தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்ற பாஜக முயற்சி: திருமாவளவன் குற்றச்சாட்டு | thirumavalavan accuses BJP trying to rule TN

1373188
Spread the love

சேலம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26-வது மாநில மாநாடு சேலம் நேரு கலையரங்கில் தொடங்கியது. 4 நாள் நடைபெறும் மாநாட்டின் முதல் நாளில் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்களின் அணிவகுப்பு மரியாதை, திருப்பூரில் இருந்து வந்த தியாகச்சுடர் பெறுதல், தியாகிகளுக்கு நினைவஞ்சலி ஆகியவை நடைபெற்றது.

தொடர்ந்து, சுதந்திர தினத்தையொட்டி தேசியக் கொடியை முன்னாள் எம்எல்ஏ பழனிசாமி ஏற்றி, மரியாதை செலுத்தினார். பின்னர், தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் மூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார். மாநாடு தொடங்கியதும் மறைந்த தலைவர், முக்கிய பிரமுகர்களுக்கு அஞ்சலி தீர்மானம் வாசிக்கப்பட்டது.

அரசியல் விளக்கவுரை கூட்டத்தை மாநிலச் செயலாளர் முத்தரசன் தொடங்கி வைத்தார். கட்சியின் தேசிய செயலாளர்கள் அமர்ஜித் கவுர், நாராயணன், ஆனி ராஜா, தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் வெங்கடாசலம், மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது: “திமுக தலைமையிலான இந்த கூட்டணி வலுவான கூட்டணி. சனாதனத்தை எதிர்க்கிற கூட்டணி. பாஜக, சங்பரிவாரங்களை தமிழகத்திற்குள் நுழையவிடாமல் தடுக்கும் கூட்டணி என்பதில் மாற்று கருத்து இல்லை . ஆனால் , தில்லுமுல்லு வேலைகளை செய்து நம்மை வீழ்த்த அவர்கள் முயற்சிக்கலாம். எப்படியெல்லாம் இவற்றை நாம் எதிர்கொள்ளப் போகிறோம், எப்படி அதை முறியடிக்க போகிறோம், இதை மக்களிடம் எப்படி அம்பலப்படுத்த போகிறோம். வலது சாரிகளை எதிர்கொள்வதற்கு இடதுசாரிகளின் வலிமை மென்மேலும் பெருக வேண்டிய தேவை உள்ளது.

இடதுசாரிகளின் வலிமை என்பது, கம்யூனிஸ்ட் கட்சிகளின் கருத்தோடு இணைந்துது இயங்கக்கூடிய ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையாகும். அது சட்டமன்றத்தில் எத்தனை இடங்களில் வெற்றி பெறுவோம் என்பதில் இல்லை, நாடாளுமன்றத் தேர்தலில் எத்தனை இடங்களில் வெற்றி பெறுகிறோம் என்பதில் இல்லை. தேசிய அளவில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஒற்றுமையும் ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையும் ஒருங்கிணைக்கப்பட வேண்டிய, ஒன்று திரட்டப்பட வேண்டிய தேவைகள் தான் இன்று நம் முன் இருக்கின்ற சவாலாகும். அனைத்து ஜனநாயக கட்சிகளையும் அணி திரட்ட வேண்டிய பொறுப்பு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இருக்கிறது .உங்களோடு இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற புரிதலோடு இதனை பதிவு செய்கிறேன்.

தேர்தல் ஆணையமும் பாஜகவும் சேர்ந்து கொண்டுபிஹாரில் திருட்டு வேலைகளை செய்து வருவதை நாம் பார்க்க முடிகிறது. அமித்ஷா, தமிழகத்திற்கு வரும் போது 2026-ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தான் அமையும். கூட்டணி ஆட்சி உருவாகும் என்று திரும்பத் திரும்ப சொல்கிறார்.

பிஹார் தில்லு முல்லு குறித்து, ராகுல் காந்தி ஆதாரத்துடன் விவரித்து இருக்கிறார். இதுபோல தில்லுமுல்லு வேலைகளை தமிழகத்திலும் அவர்கள் செய்ய முயலலாம். அதன் மூலம் ஆட்சியை கைப்பற்றலாம் என திட்டமிட்டு இருக்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது.

கர்நாடகா, மகாராஷ்டிரா தேர்தல்களில் அவர்கள் பெற்ற வெற்றியின் பின்னால் இப்படிப்பட்ட தில்லுமுல்லு வேலைகள் நடந்திருக்க வாய்ப்புள்ளது என்று அரசியல் வல்லுநர்கள் அழுத்தமாக பேசுகிறார்கள். இவற்றை நாம் எதிர் கொள்ள வேண்டும். ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி அரசியலமைப்பு சட்டத்தை சிதைக்க பார்க்கிறார்கள். தேர்தல் ஆணையத்துடன் கூட்டு சேர்ந்து, ஆட்சி அதிகாரத்தை திருடுகிற முயற்சியை பாஜக சங்க பரிவார்கள் மேற்கொண்டுள்ளனர். அதை எதிர்கொள்ளும் வகையில், திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது.ஆனால் பிஹார் போன்று எஸ்ஐஆர் தில்லுமுல்லு வேலைகளை செய்து நம்மை வீழ்த்த அவர்கள் முயற்சிக்கலாம்.

காங்கிரஸ், இடதுசாரிகள் இல்லாத பாரதம், திராவிட கட்சிகள் இல்லாத தமிழகம் என பாஜக வெளிப்படையாக பேசுகிற நிலை உள்ளது. அது தேர்தல் முழக்கம் அல்ல அரசியல் முழக்கமும் அல்ல. பாரம்பரிய கோட்பாடு பின்னணியாகும். பாசிசம் முற்றிப்போய் உள்ளது. அந்த பாசிசம் வீழ்த்தப்பட வேண்டும் என்பதை நேரடியாக சொல்லாமல் ஜனநாயகம் வெல்ல வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சொல்கிறது. இப்படிப்பட்ட களத்தில் விடுதலை சிறுத்தை உறுதுணையாக இருக்கும்” இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *