பீகார் தேர்தல் தோல்வியின் விரக்தியை அவைக்குள் வெளிப்படுத்த வேண்டாம் : எதிர்கட்சிகளை கிண்டல் செய்த பிரதமர் – Kumudam

Spread the love

குளிர்கால கூட்டத்தொடர்

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. டிசம்பர் 1 முதல் 19-ம் தேதி வரை 15 அமர்வுகள் நடைபெறவிருக்கிறது. பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நடைபெறும் கூட்டத்தொடர் என்பதால், தேர்தல் முடிவுகள் கூட்டத்தொடரில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்தொடரில் பங்கேற்பதற்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் மோடி, நாடாளுமன்றம் சுமூகமாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். 

பிரதமர் மோடி பேச்சு

“எதிர்க்கட்சிகள் தங்கள் அமளியை அவைக்கு வெளியே வைத்துக் கொள்ள வேண்டும். அவைக்குள்ளே அமளி வேண்டாம்” என்று பிரதமர் மோடி கோரிக்கை விடுத்தார். “மக்கள் பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் பேச வேண்டும்” என்றும், நாட்டுக்காக நாம் செய்ய விரும்பும் விஷயங்களை விவாதிக்கக் கூட்டத்தொடரில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இளம் எம்.பி.க்கள், முதல் முறை எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் அதிகமாகப் பேச வேண்டும். அவர்களுக்குப் பேச அதிகமாக வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தேர்தல் தோல்வியின் தாக்கம் குறித்த விமர்சனம்

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளைக் குறிப்பிட்டுப் பேசிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளுக்கு அறிவுரை வழங்கினார். “பீகார் தேர்தல் தோல்வியின் மனச்சோர்வில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளியே வர வேண்டும். பீகார் மாநில தேர்தல் தோல்வி எதிர்க்கட்சிகளை அமைதியற்றவர்களாக மாற்றியுள்ளது” என்று அவர் விமர்சித்தார். மேலும், “வெற்றியின் ஆணவத்தையும் தோல்வியின் விரக்தியையும் அவையில் வெளிப்படுத்தக் கூடாது. பீகார் தேர்தல் தோல்வியை மனதில் கொண்டு நாடாளுமன்றத்தில் பிரச்னையை எழுப்பக் கூடாது” என்று அவர் தெரிவித்தார். நாட்டின் வளர்ச்சியே முதன்மையானது என்றும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *