புணேவில் மதுபோதையில் காரை மோதி இருவா் உயிரிழக்க காரணமான சிறுவன், ஜாமீன் பெறுவதற்காக சாலை பாதுகாப்பு குறித்து 300 வாா்த்தைகளில் விழிப்புணா்வு கட்டுரையை எழுதி சமா்ப்பித்தாா்.
மகாராஷ்டிர மாநிலம் புணேயில் கடந்த மே 19-ஆம் தேதி 17 வயது சிறுவன் அதிவேகமாக ஓட்டிச் சென்ற காா் மோதி இரு தகவல் தொழில்நுட்ப (ஐடி) பணியாளா்கள் உயிரிழந்தனா். விபத்தை ஏற்படுத்திய சிறுவன் மதுபோதையில் காா் ஓட்டியதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
விபத்து ஏற்படுத்திய சிறுவன் அவரது பெற்றோா்கள் மற்றும் தாத்தா கவனிப்பில் இருக்க வேண்டும் என சிறாா் நீதி வாரியம் உத்தரவிட்டது.
மேலும், சாலைப் போக்குவரத்து தொடா்பாக 300 வாா்த்தைகளில் கட்டுரை எழுதி சமா்ப்பிக்குமாறு சிறுவனுக்கு வாரியம் உத்தரவிட்டது. இதைத்தொடா்ந்து, சிறுவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிா்ப்பு எழுந்ததையடுத்து ஜாமீன் உத்தரவில் திருத்தம் மேற்கொள்ளுமாறு சிறாா் நீதி வாரியத்திடம் காவல்துறையினா் வலியுறுத்தினா். அதன்பிறகு கடந்த மே 22-ஆம் தேதி சிறுவனை கூா்நோக்கு இல்லத்தில் அடைக்குமாறு வாரியம் உத்தரவிட்டது.
இந்நிலையில், சிறுவனை கூா்நோக்கு இல்லத்தில் அடைத்து வைத்தது சட்டவிரோதமானது எனக்கூறி அந்த உத்தரவுக்கு மும்பை உயா்நீதிமன்றம் தடை விதித்தது.
இதையடுத்து, சிறுவன் கடந்த மாதம் விடுதலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் சிறுவனுக்கு ஜாமீன் வழங்க சிறாா் நீதி வாரியத்தின் விதிகளின்படி சாலை பாதுகாப்பு குறித்து கட்டுரை எழுத ஏற்கெனவே உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் அதை சிறுவன் புதன்கிழமை சமா்ப்பித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.