தந்தை பெயரில் ரூ.40 கோடி சொத்து, சொகுசு காரில் சைரன், மாற்றுத்திறனாளி சான்றிதழ் என பல்வேறு புகார்களை எதிர்கொண்டுள்ள புணே துணை ஆட்சியராக இருந்த பூஜாவின் பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
40 கோடிக்கு மேல் சொத்து இருக்கிறது, ஆனால், ஏழை என்று ஒதுக்கீட்டுப் பிரிவில் பணியில் சேர்ந்துள்ளார், பார்வை மாற்றுத்திறனாளி என சான்றிதழ் கொடுத்துள்ளார். அதற்கான சோதனைக்கும் வராமல் இருந்திருக்கிறார். ஆனால் ஆடி காரை ஓட்டுகிறார் என பூஜா மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
பாட் காவல்நிலையத்தில், பூஜாவின் பெற்றோர் திலீப் கேத்கர் – மனோரமா கேத்கர் மீது, விவசாயிகளை மிரட்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் விவசாயிகளை மனோரமா கேத்கர், கையில் துப்பாக்கியுடன் மிரட்டும் புகைப்படங்களும் எக்ஸ் வலைத்தளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் 232, 504, 506 ன் கீழ், பூஜாவின் பெற்றோர் மற்றும் ஐந்து பேர் மீது முதல் தகவல் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
பூஜாவின் தந்தை வாங்கிய நிலம் தொடர்பாக எழுந்த பிரச்னையில், அங்கிருந்த விவசாயிகளை, மனோரமா கையில் துப்பாக்கியுடன் மிரட்டும் விடியோவும் ஊடகங்களில் வெளியாகியிருக்கிறது.
பூஜா விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விவசாயிகள் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குடிமைப் பணித் தேர்வில் தேர்ச்சி பெற்று புணே உதவி ஆட்சியராக நியமிக்கப்பட்ட பூஜா கேத்கர் மீது, ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பூஜா தனது சொகுசு வாகனத்தில் மகாராஷ்டிர அரசு என்றும், சைரன் அமைப்பைப் பொருத்திக்கொண்டதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்வான புகைப்படத்தை அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்ததன் மூலம் அது வைரலாகி, பெரும் பிரச்னையைக் கிளப்பியிருக்கிறது. இதனால், பூஜா கேத்கர் புணேவிலிருந்து பணியிட மாற்றம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பூஜா கேத்கர் வீட்டுக்குச் சென்ற புணே காவல்துறையினர், அவரது காரை ஆய்வு செய்தனர். முன்னதாக, அவர் புணே துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டிருந்தார். அவரது அதிகாரத்துக்கு மீறிய சில நடைமுறைகளை அவர் செய்துகொண்டதாகக் குற்றம்சாட்டப்பட்டதையடுத்து அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதுபோல, பூஜாவின் தந்தை ஓய்வுபெற்ற நிர்வாக அதிகாரி என்றும், அவர் அண்மையில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார் என்றும், தனது மகளின் விருப்பங்களை நிறைவேற்றுமாறு ஆட்சியர் அலுவலக ஊழியர்களுக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், பூஜாவின் தந்தைக்கு 40 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகவும், ஆனால் இவரோ ஓபிசி பிரிவின்கீழ் இப்பதவிக்குத் தேர்வாகியிருப்பதாகவும், இவரது தேர்வே கேள்விக்குறியாக இருப்பதாகவும் சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அது மட்டுமல்லாமல், அவர் பார்வை மாற்றுத்திறனாளி என சான்றிதழ் கொடுத்து தேர்ச்சி பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.