“புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக கடைசி மூச்சு வரை போராடியவர் மா.ச.முனுசாமி” – அமைச்சர் புகழஞ்சலி | “M. S. Munusamy fought against the New Education Policy till his Last Breath” – Minister Pugajanjali

1340167.jpg
Spread the love

செங்கல்பட்டு: தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நிறுவன தலைவர்களில் ஒருவரும், இடதுசாரி தலைவருமான மா.ச.முனுசாமி ஞாயிற்றுக்கிழமை வயது மூப்பின் காரணமாக செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கருங்குழியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு அரசியல் கட்சியினர், பொதுமக்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து இன்று (நவ.18) மா.ச.முனுசாமியின் உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் மருத்துவ கல்விக்காக உடல் தானம் செய்யப்பட்டது. இந்நிகழ்வின்போது தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறைகள் அமைச்சர் தா.மோ.அன்பரசன், செங்கல்பட்டு சட்டப்பேரவை உறுப்பினர் வரலட்சுமி ஆகியோர் தமிழக அரசின் சார்பில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

இதன் பின்னர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் செய்தியாளரிடம் கூறியது: “மறைந்த ஆசிரியர் மா.ச.முனுசாமி தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவராக திறம்பட செயல்பட்டவர் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு பொறுப்புகளை ஏற்று ஆசிரியர் சமூகத்திற்காக கடும் அரும்பாடுபட்டவர். ஆசிரியர்களின் பல கோரிக்கைகளை வலியுறுத்தி பல போராட்டங்களை நடத்தி அதில் பல வெற்றிகளையும் கண்டுள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்த புதிய கல்விக் கொள்கை எதிர்த்து இறுதி மூச்சு வரை போராடியவர். அவரது இறப்பு ஆசிரியர் சங்கத்திற்கு பேரிழப்பாகும். ஆசிரியர் முனுசாமியின் இறப்பு செய்தி அறிந்த தமிழக முதல்வர் இரங்கல் செய்தி வெளியிட்டது மட்டுமின்றி எங்களை நேரடியாக சென்று அஞ்சலி செலுத்த வேண்டும் என கூறினார்.

மறைந்த ஆசிரியர் முனுசாமி மற்றும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தமிழக அரசின் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இது போன்ற ஆளுமைகள் கிடைப்பது அரிது. வாழும்போதும் வாழ்வுக்குப் பின்னரும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற அடிப்படையில் அவரது உடலை செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக தனது உடலை தானமாக வழங்கியுள்ளார். இது போன்ற செயலை யாரும் செய்து விட முடியாது மறைந்த ஆசிரியர் முனுசாமியின் புகழ் நீடித்திருக்க வேண்டும்” என்று அமைச்சர் கூறினார்.

முன்னதாக மறைந்த மாச.முனுசாமி இல்லத்தில் நடைபெற்ற இறுதி அஞ்சலி மற்றும் இரங்கல் கூட்டம் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் மு.மணிமேகலை தலைமையில் நடைபெற்றது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *