மன்னார் வளைகுடா அருகே நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று வலு குறையக்கூடும். இதன் காரணமாக தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள் உட்பட 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலசந்திரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: இலங்கை கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலவுகிறது. மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுகுறைந்து, தென்தமிழகப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவக்கூடும்.
இதன் காரணமாக தமிழகத்தில் டிச. 12-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நாகை மாவட்டம் கோடியக்கரையில் 18 செ.மீ., தலைஞாயிறில் 15 செ.மீ., வேளாங்கண்ணியில் 13 செ.மீ., செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 12 செ.மீ., சென்னை கொளத்தூர், மாதவரம், அம்பத்தூரில் 11 செ.மீ., நாகை மாவட்டம் திருக்குவளை, வேதாரண்யம், திருப்பூண்டி, மயிலாடுதுறை, திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம், சென்னை அயப்பாக்கம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தென் தமிழகத்தில் இன்று பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களிலும், வரும் 16, 17, 18-ம் தேதிகளில் சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.
அந்தமான் அருகே வரும் 15-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக வரும் 16-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 17-ம் தேதி கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 18-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
16 சதவீதம் அதிக மழை: அக். 1 முதல் டிச. 31 வரை வடகிழக்குப் பருவமழை காலமாகும். அக். 1 முதல் டிச. 12-ம் தேதி வரை வழக்கமாக 40 செ.மீ. மழை பெய்யும். இந்த ஆண்டு 46 செ.மீ. மழை பெய்துள்ளது. இதுவழக்கத்தை விட 16 சதவீதம் அதிகம். சென்னையில் 91 செ.மீ. மழை பெய்துள்ளது. இது வழக்கத்தைவிட 24 சதவீதம் அதிகம். திருப்பத்தூரில் வழக்கத்தை விட 86 சதவீதம், கிருஷ்ணகிரியில் 78 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது.
ஃபென்சல் புயல் புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என சரியாக கணித்தோம். நேரம் மட்டும்தான் மாறியது. வளர்ச்சி அடைந்த நாடுகளில் கூட வானிலை கணிப்பு மாறியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.