சென்னை: வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஈரோடு, வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலு குறைந்து, தெற்கு கர்நாடகத்தின் உள்பகுதி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது நாளை அரபிக்கடலில் நிலவக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை வட மேற்கு திசையில் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் தாக்கத்தால், நாளை (அக்.24) தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது, நாளை வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையக்கூடும்.
இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நாளை முதல் 28-ம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் நாளை கோவை மாவட்ட மலை பகுதிகள், நீலகிரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களிலும், 26-ம் தேதி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையிலும், 27, 28 தேதிகளில் ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நாளை சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் 13 செமீ, தருமபுரி மாவட்டம் அரூரில் 11 செமீ, நாமக்கல் மாவட்டம் மோகனூர், நாமக்கல், நீலகிரி மாவட்டம் விண்ட் வொர்த் எஸ்டேட், திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோயிலில் தலா 9 செமீ, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டை, நீலகிரி மாவட்டம் கிளன்மார்கனில் தலா 8 செமீ, கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுர்க்கம், ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டம் சூரப்பட்டு, கெடார், திருச்சி மாவட்டம் துவாக்குடி, நீலகிரி மாவட்டம் நடுவட்டம், பந்தலூர், சேலம் மாவட்டம் மேட்டூர், திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு, திருநெல்வேலி மாவட்டம் ஊத்தில் தலா 7 செமீ மழை பதிவாகியுள்ளது’ இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.