புதிய குற்றவியல் சட்டங்களில் மாநில அளவில் திருத்தம் மேற்கொள்ள முன்னாள் நீதிபதி தலைமையில் ஒரு நபர் குழு: முதல்வர் உத்தரவு | one member team for To amend the new criminal laws at the state level

1276787.jpg
Spread the love

சென்னை: மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில் மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்ள, முன்னாள் நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒருநபர் குழு அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகிய சட்டங்கள், மத்திய அரசால் ‘பாரதிய நியாய சன்ஹிதா – 2023’, ‘பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா – 2023’ மற்றும் ‘பாரதிய சாக்‌ஷிய அதிநியம் – 2023’ என மாற்றப்பட்டு, கடந்த 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துஉள்ளன.

நாடாளுமன்றத்தில், முறையான விவாதங்கள் ஏதுமின்றியும், மாநிலங்களின் கருத்துகளை கேட்காமலும், அவசர அவசரமாக கொண்டு வரப்பட்டுள்ள இச்சட்டங்களின் பல்வேறு பிரிவுகளை எதிர்த்து நாடெங்கும் எதிர்ப்புகளும், போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

நாடு முழுவதும் உள்ள பெரும்பான்மையினரின் கருத்தை பிரதிபலிக்கும் வகையில், இந்தப் புதிய சட்டங்களில் என்னென்ன பிரச்சினைகள் உள்ளன என்பதை தெளிவாக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த ஜூன் 17-ம் தேதி கடிதம் மூலமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தெரிவித்து உள்ளார்.

இந்த சட்டங்களை நடைமுறைப் படுத்துவதை மத்திய அரசு தள்ளிவைக்க வேண்டும் என்றும், முறையாக அனைத்து மாநில அரசுகளின் கருத்துகளை பெற்ற பின்னரே இவ்விஷயத்தில் முடிவெடுக்க வேண்டும் எனவும் தனது கடிதத்தில் கேட்டுக் கொண் டிருந்தார்.

இந்நிலையில், தமிழக அரசின் சார்பில் இப்புதிய சட்டங்களில் என்னென்ன சட்டத் திருத் தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பி.வில்சன், என்.ஆர்.இளங்கோ, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, உள்துறை செயலர் அமுதா, டிஜிபி சங்கர் ஜிவால், பொதுப்பணித் துறை செயலர் ரீட்டா ஹரீஸ் தக்கர், காவல் துறை கூடுதல் இயக்குநர் அன்பின் தினேஷ் மோதக், அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், தலைமை குற்றவியல் அரசு வழக்கறிஞர் அசன் முகம்மது ஜின்னா, சட்டத்துறை செயலாளர் எஸ்.ஜார்ஜ் அலெக்சாண்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தின் முடிவில், இந்த புதிய சட்டங்களில் மாநில அளவில் பெயர் மாற்றம் உட்பட என்னென்ன திருத்தங்கள் கொண்டு வரவேண்டும் என்பதை ஆராய்ந்து, அரசுக்கு பரிந்துரை செய்ய, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.சத்யநாராயணன் தலைமையில் ஒருநபர் குழுவை அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டார்.

இக்குழு, இந்த புதிய சட்டங்கள் குறித்து தெளிவாக ஆராய்ந்து, மாநில அளவில் வழக்கறிஞர்கள் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்து, மாநில அளவில் என்னென்ன திருத்தங்களை கொண்டு வரலாம் என்பது பற்றிய தனது அறிக்கையை ஒரு மாத காலத்துக்குள் அரசுக்கு வழங்கும் என்று தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *