புதிய போப் யார்? தயாராகும் வாடிகன்.. தனிமைப்படுத்தப்படும் கார்டினல்கள் – Kumudam

Spread the love

கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் மதத் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் கடந்த ஏப்.,21 ஆம் தேதி உடல்நலக் குறைப்பாட்டினால் காலமானார். அவருக்கு வயது 88. போப் பிரான்சிஸ் மறைவினைத் தொடர்ந்து செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைப்பெற்ற இறுதிச்சடங்கு நிகழ்வில் அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவின் ஜனாதிபதி திரவுபதி முர்மு உட்பட உலகின் அனைத்து முன்னணி தலைவர்களும் பங்கேற்று தங்களது மரியாதையினை செலுத்தியினர்.

இதனைத் தொடர்ந்து புதிய போப்பை தேர்வு செய்வதற்காக நாளை (மே 7) கூடுகிறது கார்டினல்கள் கூட்டம். அப்போஸ்தலிக் அரண்மனையிலுள்ள சிஸ்டைன் சேப்பலில் இதற்காக ரகசிய வாக்கெடுப்பு நடைப்பெற உள்ளது. இந்த வாக்கெடுப்பில் பங்கேற்க உள்ள 133 கார்டினல்களும் ஏற்கெனவே ரோம் வந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

துண்டிக்கப்படும் தொலைத்தொடர்பு சேவை:

ரகசிய வாக்கெடுப்பின் ஒரு பகுதியாக, புதன்கிழமை உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு வாடிகன் பகுதியில் தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. வாக்கெடுப்பில் பங்கேற்கும் அனைத்து கார்டினல்களும் இன்று முதலே (செவ்வாய்கிழமை) வெளி உலகத்திலிருந்து தனிமைப்படுத்தப்படுவார்கள். அவர்களது தொலைபேசி மற்றும் அனைத்து மின்னணு சாதனங்களும் கைப்பற்றப்படும். வாக்கெடுப்பு முடிந்ததும் அவர்களிடத்தில் இந்த சாதனங்கள் மீண்டும் ஒப்படைக்கப்படும் என வாடிகன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ரகசிய வாக்கெடுப்பின் போது கார்டினல்கள், வாடிகன் கத்தோலிக்க திருச்சபையின் பணியாளர்கள் அனைவரும் ரகசியம் காப்பது குறித்த சத்தியப் பிரமாணம் மேற்கொள்வார்கள். மூன்றில் இரண்டு பங்கு வாக்கினை பெறும் நபர் புதிய போப்பாக தேர்ந்தெடுக்கப்படுவார்.

ஒருவேளை நாளைய தினமே புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டால், சிஸ்டைன் சேப்பலில் ஏற்கெனவே பொருத்தப்பட்டுள்ள புகைப்போக்கியில் வெள்ளை நிற புகை வெளியேறும் படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாறாக புதிய போப் தேர்ந்தெடுப்பதில் போதுமான வாக்கு சதவீதம் கிடைக்காமல் போனால், புகைப்போக்கியில் கருப்பு நிற புகை வெளியேறும். இதனால், வாடிகன் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *