‘புதிய மின்கம்பம் நடுவதற்கு ரூ. 2000 லஞ்சம்!’ – உதவி பொறியாளருக்கு மூன்று ஆண்டுகள் சிறை விதித்து தீர்ப்பு – kulithalai crime!

Spread the love

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள நெய்தலூர் காலனி, ராஜன் நகர் பகுதியில், காசி ரைஸ் புலவர் மற்றும் ஆயில் மில் செயல்பட்டு வருகிறது.

இதற்கு புதிய மின் இணைப்பு பெற, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பொது மேலாளராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற சுந்தரராஜ் என்பவர், குளித்தலை சின்ன பனையூர் மின்வாரிய அலுவலகத்தில் உள்ள உதவி பொறியாளர் டி.ஆர். நாராயணனை கடந்த 2011-ம் ஆண்டு அணுகியபோது, புதிய மின் கம்பம் அமைப்பதற்கு ரூ. 2000 லஞ்சம் கேட்டுள்ளார்.

ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத சுந்தரராஜ் திருச்சியில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்தார்.

அவர் அளித்த புகார் அடிப்படையில், கடந்த 10.08.2011-ம் தேதி சுந்தரராஜிடமிருந்து ரூ. 2000 லஞ்சம் பெற்றபோது உதவி பொறியாளர் நாராயணன் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக, கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்து, நேற்று மாலை நீதிபதி இளவழகன் தீர்ப்பளித்தார்.

அவர் வழங்கிய தீர்ப்பில், லஞ்சம் பெற்ற மின்வாரிய உதவி செயற்பொறியாளர் நாராயணனுக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும், அதை செலுத்த தவறினால் மேலும் 9 மாத சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

இதனை தொடர்ந்து, நாராயணனை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீஸார் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். புதிய மின் கம்பம் அமைக்க ரூ. 2000 லஞ்சம் கேட்ட வழக்கில் உதவி பொறியாளருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *