மும்பை மாநகராட்சி உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மாநகராட்சிகளின் பதவிக்காலம் கடந்த 2022ம் ஆண்டே முடிந்துவிட்டது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. உள்ளாட்சி அமைப்புகளில் எத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருந்த காரணத்தால் தேர்தல் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. சமீபத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜனவரி மாத இறுதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க மகாராஷ்டிரா மாநில தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது.
அதன் அடிப்படையில் முதல் கட்டமாக மாநிலம் முழுவதும் உள்ள நகராட்சிகளுக்கு கடந்த 2ம் தேதி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 21ம் தேதி எண்ணப்பட இருக்கிறது. அடுத்த கட்டமாக மும்பை உட்பட மாநிலம் முழுவதும் இருக்கும் 29 மாநகராட்சிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்தல் வரும் ஜனவரி 15ம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலோடு சேர்த்து 336 பஞ்சாயத்து சமிதிகள், 32 மாவட்ட கவுன்சில்களுக்கும் அதேநாளில் தேர்தல் நடக்கிறது.
தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த நாளே எண்ணப்படுகிறது. இத்தேர்தலில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் பா.ஜ.க தீவிரமாக செயல்பட்டு வருகிறது. நாட்டில் மிகவும் பணக்கார மாநகராட்சியாக கருதப்படும் மும்பை மாநகராட்சியை பிடிக்க வேண்டும் என்பது பா.ஜ.கவின் நீண்ட கால திட்டமாகும். கடந்த 2019ம் ஆண்டு வரை பா.ஜ.க மற்றும் சிவசேனா கட்சிகளின் கூட்டணி இருந்தவரை மும்பை மாநகராட்சியை ஒன்றுபட்ட சிவசேனாதான் ஆட்சி செய்து வந்தது.
ஆனால் இப்போது சிவசேனா இரண்டாக உடைந்துவிட்டது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா பா.ஜ.கவோடு கூட்டணியில் இருக்கிறது. இது தவிர அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இப்போது பா.ஜ.க கூட்டணியில் இருக்கிறது. இதை பயன்படுத்தி வெற்றி பெற்றுவிட முடியும் என்று பா.ஜ.க கருதுகிறது. இதே போன்று உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவும் இம்முறையும் மும்பை மாநகராட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. இதற்காக 20 ஆண்டுகளுக்கு பிறகு உத்தவ் தாக்கரே தனது சித்தப்பா மகன் ராஜ் தாக்கரே கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ளார்.