புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு அதிகபட்சமாக ஆவுடையார்கோவிலில் 120 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
புதுக்கோட்டையில் நேற்று இரவு லேசான காற்றுடன் மழை பெய்ததால் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் நீண்ட நேரம் மின் தடை ஏற்பட்டது. மேலும், புதுக்கோட்டையில இருந்து கைக்குறிச்சி வரையில் மேற்கொள்ளப்பட்டு வரும் 4 வழிச்சாலை பணியையொட்டி வீடுகளைச் சுற்றிலும் மழை நீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகினர்.
மாவட்டம் முழுவதும் சம்பா சாகுபடி பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டத் தொடங்கி உள்ளனர். குறிப்பாக, அதிக பரப்பளவில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி வட்டாரத்தில் வயல்களில் உரமிடுதல், களைக்கொல்லி தெளித்தல் போன்ற பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.நாற்று நடுவதற்காக வயல்களை தயார் செய்யும் பணியிலும் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இன்றும் அறந்தாங்கி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
மாவட்டத்தில் நேற்று இரவு பதிவாகிய மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்): ஆவுடையார்கோவில்(120), புதுக்கோட்டை(79), இலுப்பூர்(65), அன்னவாசல்(47), கந்தர்வக்கோட்டை(46), மீமிசல், மணமேல்குடி தலா(40), பொன்னமராவதி(32), அறந்தாங்கி(31), கீழாநிலை(28), விராலிமலை(20), பெருங்களூர்(19), கறம்பக்குடி(18), நாகுடி(17), ஆயிங்குடி(14), காரையூர், ஆதனக்கோட்டை தலா (12), திருமயம்(10), குடுமியான்மலை, ஆலங்குடி தலா (8), உடையாளிப்பட்டி(7), மழையூர், அரிமளம் தலா (5) மற்றும் கீரனூர்(1).