புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட திருச்சி ரவுடி துரைசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு இன்று (ஜூலை 12) மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை கோருவோம் என்று துரைசாமி தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார்.
போலீஸ் என்கவுன்டர்: திருச்சி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் துரை என்ற துரைசாமி (42). இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் யூக்கலிப்டஸ் காட்டுப் பகுதியில் பதுங்கி இருந்த துரைசாமியை ஆலங்குடி காவல் நிலைய ஆய்வாளர் முத்தையன் வியாழக்கிழமை என்கவுன்டரில் சுட்டுக் கொன்றார். துரைசாமி வெட்டியதில் காயம் அடைந்த காவல் உதவி ஆய்வாளர் மகாலிங்கம் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக துரைசாமியின் உடல் கொண்டு வரப்பட்டிருந்தது.
உறவினர்கள் மறியல்: இந்நிலையில், காவல் துறையினர் திட்டமிட்டு துரைசாமியை கொலை செய்ததாகக் கூறி அவரது உறவினர்கள் மருத்துவக் கல்லூரி அருகே இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், போலீஸார் நடத்திய போச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும், துரைசாமியின் உடலைப் பார்ப்பதற்கு போலீஸார் அனுமதி அளிக்காததைக் கண்டித்து போலீஸாருடன் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, புதுக்கோட்டை கோட்டாட்சியர் பா.ஐஸ்வர்யா நேரில் வந்து துரைசாமியின் உடலை பார்வையிட்டார்.
உடல் ஒப்படைப்பு: அதன்பிறகு மருத்துவக் குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். அப்போது, துரைசாமியின் மார்பில் குண்டு பாய்ந்தது தெரியவந்தது. மேலும், தடயவியல் சோதனைக்காக தோட்டா சேகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு துரைசாமியின் சடலத்தை உறவினர்கள் பெற்றுச் சென்றனர். இதனால் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சிபிசிஐடி விசாரணை கோர முடிவு: புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்தியாளர்களைச் சந்தித்த, துரைசாமியின் வழக்கறிஞர் பிரபாகரன் கூறியது: “கோவை காவல் உதவி ஆணையர் அலுவலகத்துக்கு நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திடுவதற்காக தனது சகோதரி மகன் வெள்ளைச்சாமியுடன் துரைசாமி சென்றார். அப்போது, நம்பர் பிளேட் இல்லாத 3 வாகனங்களில் சீருடை அணியாத போலீஸார் துரைசாமியைப் பிடித்து, புதுக்கோட்டைக்கு அழைத்து வந்து சுட்டுக் கொன்றுள்ளனர்.
வழக்குகளை முடித்து திருந்தி வாழ முற்பட்ட துரைசாமியை, காவல் துறையினர் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு கொலை செய்துள்ளனர். எனவே, சட்டப்படி நீதித்துறை நடுவர் விசாரணை நடத்த வேண்டும். ஆனால், காவல் துறைக்கு உறுதுணையாக இருக்கும் கோட்டாட்சியரை வைத்து விசாரணை நடத்தியுள்ளனர். ஏற்கெனவே, மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளோம். இந்த கொலை வழக்கை சிபிசிஐடி போலீஸ் விசாரிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் முறையிடுவோம்” என்று அவர் கூறினார்.