இங்கு அருளும் மங்களநாயகி அம்பாளுக்கு மாங்கல்யம் நல்கும் மங்கள நாயகி என்றும் திருப்பெயர் உண்டு. திருமண வரம் அருளும் தேவி என்பதால் இந்தத் திருநாமம். திருமணம் முடித்த பெண்கள், இங்கு வந்து அம்பாள் சந்நிதி முன் நின்று அன்னையை வணங்கி, தங்களுடைய மாங்கல்யத்தின் மீது குங்குமம் வைத்து வேண்டிக்கொண்டால், மாங்கல்யம் நிலைத்து நிற்கும் என்பது ஐதீகம்.
எல்லோ கோயில்களிலும் திருக்கரங்களில் தாமரை ஏந்திய கோலத்தில் சூரியன் அருள் பாலிப்பார். இங்கே விசேஷமாக… இடது கை இடுப்பில் பொருந்தியிருக்க, வலது கையால் அபயம் காட்டியபடி அவர் அருள்வது சிறப்பு. எனவே இத்தலம் சூரிய பரிகாரத்தலமாகவும் திகழ்கிறது.
இங்கு அருளும் ஜேஷ்டாதேவியின் கைகளில் மாந்தியும் குளிகனும் குழந்தைகளாகத் திகழ்கிறார்கள். இந்தத் தேவியையும் அம்பாளையும் தரிசிப்பதால், திருமண வரம் கைகூடும், மாங்கல்ய பலம் பெருகும் என்பது நம்பிக்கை.

பெளர்ணமி தினத்தில் அம்பாளுக்கும் தேய்பிறை அஷ்டமியில் ஜேஷ்டாதேவிக்கும் பைரவருக்கும் அபிஷேகங்கள் நடக்கின்றன. நவராத்திரி, ஆடிவெள்ளிகளில் அம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெறும்.
கருவறைக் கோஷ்ட மாடங்களில் தட்சிணா மூர்த்தி, வீராடன மூர்த்தி, பிட்சாடனமூர்த்தி ஆகிய மூவரையும் தரிசிக்கலாம். இப்படி இந்த மூவரும் அருளும் கோயில்கள் மிகவும் குறைவு!
திருக்கட்டளை ஆலயத்தில் அருளும் தட்சிணா மூர்த்தி, விசேஷ கோலத்தில் அருள்கிறார். திருக்கரத்தில் தண்டியுடன், வீணையையும் வைத்திருக்கிறார். `இசை ஞானம் கிடைக்க வழி செய்பவர் இந்த வீணாதட்சிணா மூர்த்தி’ என்கிறார்கள். அன்பர்கள் பலரும் இங்கு வந்து தங்களுக்கு இசைஞானம் வாய்க்கவும் பெருகவும் இந்தத் தட்சிணா மூர்த்தியை வழிபட்டுச் செல்கின்றனர்.
ஆருத்ரா தரிசனம், பிரதோஷம், மகா சிவராத்திரி ஆகிய விழாக்கள் இந்தக் கோயிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. மிகவும் பழைமையான இந்த ஆலயம் இந்து சமய அறநிலையத்துறை, தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இன்றைக்கும் பொலிவு குறையாத வண்ணம் பராமரிக்கப்பட்டு வருகிறது.
எப்படிச் செல்வது: புதுக்கோட்டையிலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் இருக்கிறது திருக்கட்டளை திருக்கோயில். புதுக்கோட்டையிலிருந்து ஆட்டோ அல்லது வாடகைக்கார் மூலம் இந்த ஆலயத்துக்குச் சென்று வரலாம்.