புதுக்கோட்டை மீனவர்கள் 13 பேர் கைது: இலங்கைக்கு தமிழக அரசியல் கட்சியினர் கண்டனம் | 13 fishermen of Pudukottai district captured by Sri Lanka Navy

1277856.jpg
Spread the love

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 13 மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் இன்று (வியாழக்கிழமை) சிறைப்பிடித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து 76 விசைப்படகுகளிலும், கோட்டைப்பட்டினத்தில் இருந்து 196 விசைப்படகுகளிலும் மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அதில், ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த செல்வகுமாருக்குச் சொந்தமான விசைப்படகில் 5 பேரும், மணிகண்டனுக்குச் சொந்தமான விசைப்படகில் 4 பேரும் மற்றும் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த கலந்தர் நைனா முகமது என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் 4 பேரும் என மொத்தம் 3 விசைப்படகுகளில் 13 பேர் நெடுந்தீவுப் பகுதியில் மீன் பிடித்துள்ளனர்.

அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி 13 பேரையும் சிறைப்பிடித்ததோடு, அவர்களது 3 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்தனர். இலங்கையில் உள்ள காங்கேசன் துறை கடற்படை தளத்தில் வைத்து, சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களிடம் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இலங்கை கடற்படையினரால் ஒரே சமயத்தில் 13 மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு இருப்பது புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அன்புமணி கண்டனம்: தமிழக மீனவர்கள் கைது பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். அதன்படி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் அவலம் முடிவில்லாமல் தொடரக்கூடாது. இந்திய – இலங்கை அதிகாரிகள், தமிழக – இலங்கை மீனவர்கள் ஆகியோர் பங்கேற்கும் பேச்சுகளுக்கு ஏற்பாடு செய்து, இந்திய, இலங்கை கடல் பகுதியில் இரு நாட்டு மீனவர்களும் ஒழுங்கமைக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் மீன் பிடிப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

கடித நாடகம் வேண்டாம்’ – அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “புதுக்கோட்டை மாவட்டம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் 13 பேரை எல்லை தாண்டியதாக கூறி கைது செய்திருப்பதோடு, அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்திருக்கும் இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது.

கடந்த இரு வாரங்களில் மட்டும் 40-க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், தற்போது புதுக்கோட்டையைச் சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டிருப்பது தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி தமிழக மீனவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், அடுத்தடுத்து நடைபெறும் கைது சம்பவங்கள் மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

எனவே, ஒவ்வொருமுறை மீனவர்கள் கைதின் போதும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதும் நாடகத்தை இனியும் தொடராமல், மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு தமிழக முதலமைச்சர் \மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.” எனப் பதிவிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *