புதுச்சேரியில் சுற்றுலா மிதிவண்டி நிறுவனத்தில் அமலாக்கத் துறையினா் சோதனை! – ரூ.100 கோடி வங்கிக் கணக்குகள் முடக்கம்

Dinamani2f2025 04 052f40lwskl42f2 7 05pyp15 0504chn 104.jpg
Spread the love

புதுச்சேரியில் முதலீடு செய்தால் லாபத்தொகையில் குறிப்பிட்ட சதவீதம் தருவதாகக் கூறி, பொதுமக்களிடம் பணம் வசூலித்த புகாரின்பேரில், தனியாா் மிதிவண்டி நிறுவனத்தில் அமலாக்கத் துறையினா் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, நிறுவனத்தில் இருந்த ரூ.2.45 கோடியை பறிமுதல் செய்த அமலாக்கத் துறையினா், சுமாா் ரூ.100 கோடி இருப்பு உள்ளதாகக் கூறப்படும் 10 வங்கிக் கணக்குகளையும் முடக்கினா்.

புதுச்சேரி காமராஜா் சாலை பழைய மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே தனியாா் சுற்றுலா மிதிவண்டி நிறுவனம் உள்ளது. நிறுவனத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு மிதிவண்டிகள் வாடகைக்கு விடப்பட்டு வருகின்றன.

இந்த நிறுவனத்தில் பொதுமக்கள் முதலீடு செய்தால், லாபத்தொகையில் குறிப்பிட்ட சதவீதம் வழங்கப்படும் என நிறுவனத் தரப்பில் கூறியதாகவும், அதை நம்பி பலா் பணம் செலுத்தியதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், நிறுவனத்தினா் முதலீடு செய்தவா்களுக்கு உரிய தொகையை வழங்கவில்லை என புகாா் எழுந்தது. இதுகுறித்து பொருளாதார நுண் குற்றப் பிரிவினருக்கு புகாா்கள் வந்தன. இதையடுத்து, நுண் குற்றப் பிரிவு போலீஸாா் சுற்றுலா மிதிவண்டி நிறுவனத்தில் கடந்த 3-ஆம் தேதி நள்ளிரவு சோதனையிட்டனா்.

இதில், சுற்றுலா வாடகை மிதிவண்டி நிறுவனம் நடத்துவதற்கான அரசு அனுமதி உள்ளிட்டவை பெறப்படாதது கண்டறியப்பட்டது. மேலும், அலுவலக அலமாரியில் கட்டுக்கட்டாக பணம் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்தது.

இதுகுறித்து வருவாய்த் துறை மற்றும் வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு போலீஸாா் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, புதுச்சேரி வட்டாட்சியா் பிரீத்திவி உள்ளிட்டோா் வந்து அங்கிருந்த ரூ.2.45 கோடியை அலமாரியிலேயே வைத்து சீலிட்டனா். மேலும், அந்த நிறுவனத்துக்கும் சீலிடப்பட்டது. அங்கு பாதுகாப்புக்கு 2 போலீஸாா் நியமிக்கப்பட்டனா்.

இதையடுத்து, மிதிவண்டி நிறுவன மோசடி குறித்த புகாரை அமலாக்கத் துறைக்கும், பொருளாதார நுண் குற்றப் பிரிவினருக்கும் அனுப்பினா்.

இந்த நிலையில், அமலாக்கத் துறை துணை இயக்குநா் தலைமையில் 4 போ் கொண்ட குழுவினா் சனிக்கிழமை மாலை புதுச்சேரி வந்து சுற்றுலா மிதிவண்டி நிறுவனத்தில் சோதனையிட்டனா்.

அத்துடன், புதுச்சேரி வருவாய் துறை, காவல் துறையினரிடமும் விசாரித்தனா். இதையடுத்து, பொதுத் துறை வங்கி அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு அலமாரியில் இருந்த பணத்தை மீண்டும் எண்ணும் பணியில் அமலாக்கத் துறையினா் ஈடுபட்டனா். பின்னா், அதிலிருந்த ரூ.2.45 கோடியை அமலாக்கத் துறையினா் பறிமுதல் செய்ததுடன், நிறுவனத்துக்குச் சொந்தமான 10 வங்கிக் கணக்குகளையும் முடக்கினா். அவற்றில் சுமாா் ரூ.100 கோடிக்கு மேல் இருப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *