புதுச்சேரி: தியாகிகள் ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் உயர்த்தி இனி ரூ.15 ஆயிரமாக வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி செய்தி மற்றும் விளம்பரத் துறை சார்பில் வெள்ளிக்கிழமை மாலை கம்பன் கலையரங்கில் தியாகிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்வில் தியாகிகளுக்கு தேநீர் விருந்தளித்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேசியது: “நமது நாடு வளர்ச்சியடைய பெரிய தலைவர்கள் விரும்பினார்கள். இன்று உலக நாடுகளில் தலைநிமிர்ந்து இருக்கும் வகையில் பெரிய வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறோம். சிறிய மாநிலமான புதுச்சேரி நல்ல வளர்ச்சி அடைந்து வருகிறது. பல நலத்திட்டங்கள் நடந்து வருகிறன. இளைஞர்களுக்கு வேலை தர சேதராப்பட்டில் தொழிற்பேட்டை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
தொழில் தொடங்க முதலீட்டாளர்கள் வர நடவடிக்கை எடுத்து வருகிறோம். இருந்தாலும் பெரிய குறை இருக்கிறது. நாம் யூனியன் பிரதேசமாகதான் இருக்கிறோம். சுதந்திரம் வாங்கியிருந்தாலும் மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ளோம். முழு அதிகாரம் நமக்கு வேண்டும் என்பது எண்ணம். அனைத்து கட்சியினரும், முழு மாநில அந்தஸ்து வேண்டும் என்று விரும்புகிறோம். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் இருந்தால் இன்னும் புதுச்சேரிக்கு பெரிய வளர்ச்சியை கொண்டு வரமுடியும். முழு அதிகாரம் இல்லாதபோதே வளர்ச்சி பாதைக்கு செல்கிறோம். இன்னும் விரைவாக செயல்பட வளர்ச்சியடைய அதிகாரம் தேவை.
மாநில அந்தஸ்து கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கிறோம். பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரிடம் மாநில அந்தஸ்து கேட்கிறோம். முழு அதிகாரம் துணைநிலை ஆளுநருக்கு தான் இருக்கிறது. அவரது முடிவுதான் இறுதியானது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு முழு அதிகாரம் வேண்டும். நாம் சுதந்திரம் வாங்கினாலும், புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருப்பதால் அதிகாரம் இல்லை. மாநில அந்தஸ்துக்கு முழு தகுதி இருக்கிறது. அது கிடைத்தால் எதிர்பார்த்ததை விட அதிகமாக வளர்ச்சி கொண்டு வரமுடியும். விரைவில் மாநில அந்தஸ்து கிடைக்கும் என்ற நம்பிக்கையுள்ளது.
சுதந்திரம் இன்னும் முழு அதிகாரத்துடன் வேண்டும். தியாகிகளுக்கு மனைப்பட்டா கூடிய விரைவில் தர நடவடிக்கை எடுத்து வருகிறோம். வயது மூப்பு காரணமாக மருத்துவச் செலவு இருக்கிறது. தியாகிகளுக்கு ஓய்வூதியம் ரூ.12 ஆயிரம் தரப்படுகிறது. அதை ரூ.3 ஆயிரம் உயர்த்தி ரூ.15 ஆயிரமாக தரப்படும்” என்று முதல்வர் பேசினார்.
முன்னதாக, திமுக எம்எல்ஏ அனிபால் கென்னடி பேசுகையில், “முதல்வர் மாநில அந்தஸ்து பெற்று தருவார். அனைத்துக்கட்சி தலைவர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோருடன் டெல்லி சென்று பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்ட அனைவரையும் சந்திக்க வேண்டும். பதிலில் திருப்தி வராவிட்டால் டெல்லியில் போராட்டம் நடத்தவேண்டும்” என்று குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் விடுதலை போராட்ட வீரர் நலத்துறை செயலர் பத்மா ஜெய்ஸ்வால், செய்தி விளம்பரத்துறை இயக்குநர் கலியபெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக கல்வித்துறையின் ஜவகர் பால்பவனில் இலவசமாக வயலின் கற்கும் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இறுதியில் அக்குழந்தைகளை முதல்வர் கவுரவித்தார். தியாகிகளுக்கு பரிசு பெட்டகமும் அளித்தார்.