புதுச்சேரி: தொடா் மழையால் புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை(டிச.2) விடுமுறை அறிவிக்கப்பட்டது.
வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் நேற்று இரவு புதுவைக்கு அருகே கரையைக் கடந்த நிலையில், புதுச்சேரியின் பெரும்பாலான இடங்களில் பலத்த காற்றுடன் அதி கனமழை பெய்தது. இதனால், நகரில் 18 இடங்களில் மரங்கள் சாய்ந்தன, சாலைகள் துண்டிக்கப்பட்டது.
பலத்த மழையால் கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் சனிக்கிழமை இயக்கப்படவில்லை. புயல், கனமழையால் பேருந்துகளில் அதிகளவில் மக்கள் பயணிக்கவில்லை.
புதுச்சேரியிலிருந்து தமிழக அரசுப் பேருந்துகளும் கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக சென்னைக்கு இயக்கப்படவில்லை. புதுச்சேரியிலிருந்து வெளியூா்களுக்குச் செல்லும் பெரும்பாலான பேருந்துகள் சனிக்கிழமை மாலை நிறுத்தப்பட்டன.
இதையும் படிக்க | புதுவையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு பெய்த அதி கனமழை!
வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் சனிக்கிழமை இரவு புதுவைக்கு அருகே கரையைக் கடந்த நிலையில், புதுச்சேரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழையால் பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் பொதுப்பணித் துறையினர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பலத்த மழை காரணமாக புதுச்சேரியில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் திங்கள்கிழமை (டிச.2) விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்தாா்.