புதுச்சேரி: புதுச்சேரி ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
முத்தியால்பேட்டை சின்ன மணிக்கூண்டு அருகே அணிவகுப்பு ஊர்வலம் புறப்பட்டது. அணிவகுப்பை முன்னாள் காவல் கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம், புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்புத் தலைவர் பாபு, மருத்துவர் சிவதாசன், தென்பாரத ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர் ஜெ.ஸ்ரீ ராம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதில் புதுச்சேரி மாநில அமைச்சர் சாய் ஜெ.சரவணன்குமார், பாஜக தலைவர் செல்வகணபதி எம்பி, அசோக்பாபு எம்எல்ஏ மற்றும் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் ஏராளமானோர் காக்கி பேண்ட், வெள்ளைச் சட்டை, கருப்பு தொப்பி அணிந்து கொண்டு கையில் கம்புடன் மேள, தாளம் முழங்க அணிவகுத்து வந்தனர்.
அணிவகுப்பில் பாரத மாதா திருவுருவம், ஆர்எஸ்எஸ் ஸ்தாபகர்கள் மற்றும் காந்தி, அம்பேத்கர் உள்ளிட்டோர் திருவுருவப் படங்கள் அலங்கரித்து வாகனத்தில் வந்தன. வழியெங்கும் அணிவகுப்பில் வந்தவர்கள் மீது பூக்கள் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த அணிவகுப்பு ஊர்வலம் அஜந்தா சிக்னல், காந்தி வீதி, நேரு வீதி வழியாக புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி சிலை திடலை அடைந்தது.
தொடர்ந்து காந்தி திடலில் ஆர்எஸ்எஸ் கொடியேற்றத்துக்கு பிறகு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்புத் தலைவர் பாபு, மருத்துவர் சிவதாசன், தென்பாரத ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர் ஸ்ரீ ராம், ஆர்எஸ்எஸ் அமைப்பின் புதுச்சேரி பொறுப்பாளர் வெங்கடேசன் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், ராமலிங்கம் எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு முன்னதாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொடிக்கு மலர்களைத் தூவி மரியாதை செலுத்தி, ஆரத்தி மற்றும் தீபாராதனையுடன் பூஜை நடைபெற்றது.