புதுச்சேரி: புதுச்சேரியில் ஃபெஞ்சல் புயல் சேத விவரங்களை மத்தியக் குழு இம்மாதம் 8, 9-ல் ஆய்வு செய்கிறது. இதற்காக துறைரீதியாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரியில் கடந்த 30-ம் தேதி பெய்த அதி கனமழையால் ஏராளமான வீடுகளில் வெள்ளநீர் புகுந்தது. பயிர்கள் சேதமடைந்தன. கனமழையால் 4 பேர் உயிரிழந்தனர். பல இடங்களில் சாலைகள் சேதமடைந்தன. இந்நிலையில், புதுவை அரசு கேட்டுக்கொண்டதன் பேரில், வரும் 8 மற்றும் 9-ம் தேதிகளில் டெல்லியில் இருந்து புதுச்சேரியில் ஆய்வு நடத்த மத்திய இணைச் செயலர் ராஜேஷ்குப்தா தலைமையில் மத்திய குழு புதுச்சேரிக்கு வருகிறது.
இதையொட்டி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், “மழையால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளும் விவரங்களை சேகரித்து அறிக்கையாக அளிக்கவேண்டும்” என்றார். இக்கூட்டத்தில் சார்பு ஆட்சியர்கள் சோமசேகர், இசிட்டா ரதி, எஸ்எஸ்பி கலைவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.