பட்டியல் நீளும்
இந்த இரண்டு கடைகளும் முக்கிய குற்றவாளியான மதுரை ராஜாவுக்குச் சொந்தமானவை என்று தெரிவித்த சி.பி.சி.ஐ.டி போலீஸார், “இங்கிருந்துதான் போலி மருந்துகள் அனைத்து மருந்தகங்களுக்கும் சப்ளை செய்யப்பட்டிருக்கின்றன. 10 மாத்திரைகளில் 8 மாத்திரைகள் போலி என்ற அளவில் கலந்து விற்றிருக்கிறார்கள்.
எந்த விகிதத்தில் இங்கு போலி மருந்துகள் கலந்திருக்கிறது என்பதை ஆய்வு செய்ய மருந்துகளை எடுத்துச் சென்றிருக்கிறோம். படிப்படியாக அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொள்வோம்” என்று தெரிவித்தனர்.
அதேபோல் புதுச்சேரி–கடலூர் சாலையில் உள்ள பூர்ணாங்குப்பம் பகுதியில் செயல்பட்டு வந்த போலி தொழிற்சாலையை ஆய்வு செய்தபோது, அங்கும் பெட்டி பெட்டியாக போலி மருந்துகள் இருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து அந்த போலி மருந்து தொழிற்சாலையின் குடோன் இடையார்பாளையத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அங்கும் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அங்கு பெட்டி பெட்டியாக சப்ளை செய்யத் தயாராக இருந்த போலி மருந்துகள், அவற்றிற்கான மூலப்பொருட்கள், தயாரிப்பு மற்றும் பேக்கிங் இயந்திரங்கள் போன்றவற்றை சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைப்பற்றினர்.
கைப்பற்றப்பட்ட போலி மருந்துகள் மற்றும் இயந்திரங்களின் மதிப்பு சுமார் ரூ.30 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று சி.பி.சி.ஐ.டி போலீஸாரும், மருந்துக் கட்டுப்பாடுத்துறையின் அதிகாரிகளும் தெரிவித்தனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள், “இதுவரை மூன்று தொழிற்சாலைகளையும், ஐந்து குடோன்களையும் கண்டுபிடித்து சீல் வைத்திருக்கிறோம். இனிவரும் நாட்களில் இந்தப் பட்டியல் நீளும்” என்றனர்.