புதுச்சேரியில் மார்ச் மாதம் முழு பட்ஜெட் தாக்கல் | Full budget to be presented in Puducherry on March

1348598.jpg
Spread the love

புதுச்சேரி: புதுச்சேரியில் இம்முறை முழு பட்ஜெட் மார்ச்சில் தாக்கலாகிறது. இதையொட்டி புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தலைமையில் திட்டக்குழு கூட்டம் நாளை கூடுகிறது.

புதுச்சேரி சட்டப்பேரவையில் கடந்த காலங்களில் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆனால், கடந்த 2022 வரை 12 ஆண்டுகளாக மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்தது. அதன் பிறகு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

புதுச்சேரி பட்ஜெட்டுக்கு மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும். பிரதமர் மோடி தலைமையில் பாஜக அரசு மத்தியில் அமைந்தபிறகு பிப்ரவரி முதல் வாரத்திலேயே மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கின்றனர். மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரிக்கு நிதி ஒதுக்கப்படும். அதற்கு முன்னதாக புதுச்சேரி மாநில திட்டக்குழுவை கூட்டி எவ்வளவு நிதி தேவை என முடிவு செய்ய வேண்டும். ஆனால், மார்ச் மாதத்தில் திட்டக்குழு கூட்டம் நடத்தப்பட்டதால் தோராயமான தொகையை புதுச்சேரிக்கு மத்திய அரசு ஒதுக்கி வந்தது.

இதையடுத்து கடந்த 2023-ல் முழு முயற்சி எடுத்து முழு பட்ஜெட் மார்ச்சில் தாக்கலானது. ஆனால் கடந்த 2024-ல் மக்களவைத் தேர்தலால் மார்ச்சில் முழு பட்ஜெட் தாக்கலாகவில்லை. இம்முறை மார்ச்சில் முதல்வர் ரங்கசாமி முழு பட்ஜெட் தாக்கல் செய்கிறார். பட்ஜெட் தொகையை இறுதி செய்ய புதுச்சேரி மாநில திட்டக்குழு கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தலைமையில் தலைமைச்செயலகத்தில் கூடுகிறது. இதில் புதுச்சேரி மாநிலத்துக்கான பட்ஜெட் தொகை இறுதிசெய்யப்படும்.

இதுதொடர்பாக அரசு வட்டாரங்களில் விசாரித்தபோது, “வரும் 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை ரூ.13,500 கோடியில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. திட்டக்குழுகூட்டத்தில் பட்ஜெட் தொகை இறுதி செய்யப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஒப்புதல் பெற்றப்பிறகு மார்ச்சில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும்” என்றனர்.

சட்டப்பேரவையில் ஆளுநர் உரை எப்போது? – புதுச்சேரியில் நடப்பு ஆண்டில் முதல் கூட்டத்தில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உரையாற்றுவார். அது எப்போது என விசாரித்தபோது, “புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜூலை தொடங்கி ஆகஸ்ட் 14 வரை நடந்தது. சட்டப்பேரவை விதிப்படி ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சட்டப்பேரவை கூட்டப்பட வேண்டும். அதன்படி வரும் பிப்ரவரி 14-ம் தேதிக்குள் பேரவை கூட்டப்படவேண்டும். அதன்படி நடப்பு ஆண்டின் முதல் கூட்டம் பிப்ரவரி முதல் வாரத்தில் நடக்கிறது. அக்கூட்டத்தில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உரையாற்றுவார். அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்” என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *