புதுச்சேரியில் மின்துறை தனியார் மயம் ஏன்? – அமைச்சர் விளக்கம் | Puducherry Minister talks Privatization of Electricity

1339937.jpg
Spread the love

புதுச்சேரி: “மின்துறை தனியார் மயம் முடிவு எதற்கென்றால், நல்ல சேவையை மக்களுக்கு கொடுக்க வேண்டும், எந்த தடை ஏற்பட்டாலும் உடனுக்குடன் சரி செய்ய வேண்டும், அதற்கு நிறைய பணம் தேவைப்படுகிறது. அதனை அரசால் கொடுக்க முடியாது” என்று புதுச்சேரி உள்துறை மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ”புதுச்சேரி பல்கலைக்கழத்தில் உள்ளூர் மாணவர்களுக்கு 25 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். இரு தினங்களுக்கு முன்பு கூட மத்திய அமைச்சரை சந்தித்தபோது இந்த கோரிக்கையை வலியுறுத்தியுள்ளோம். அதற்குரிய நடவடிக்கையை எடுப்பதாக கூறியுள்ளார். அதனை வலியுறுத்தி விரைவில் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

புதுச்சேரி பல்கலைக்கழகம், தொழில்நுட்ப பல்கலைக்கழகம் இன்றைக்கு தரைவரிசை பட்டியலில் முன்னிலை பெறக்கூடிய சூழலில்தான் இருக்கிறது. கடந்த காலங்களில் வேண்டுமானால் தரவரிசை பட்டியலில் பின்நோக்கி சென்றிருக்கலாம். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நிறைய பேராசிரியர் காலிப்பணியிடங்கள் இருந்தது. அதனை இப்போது நிரப்பப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநில அரசு சார்ந்த கல்லூரிகளில் 167 பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

மாணவர்களுக்கு தேவையான வசதிகளையும் பல்வேறு வகைகளில் உருவாக்கி கொடுத்துக்கொண்டிருக்கின்றோம். பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. கல்லூரி மாணவர்களும் தனியாக பேருந்து வேண்டும் என்று கேட்டுள்ளனர். அது அரசின் பரிசீலனையில் இருக்கிறது. விரைவாக கல்லூரி மாணவர்களுக்கு தனியாக பேருந்து இயக்கப்படும். முத்தியால்பேட்டை அரசு பள்ளி கட்டிடம் சேதம் தொடர்பான பிரச்சனை ஏற்கெனவே அரசின் கவனத்துக்கு வந்தது.

அது தொடர்பான நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் 22-ம் தேதி டெண்டர் வைக்கப்பட இருக்கிறது. அதற்குள் தவிர்க்கமுடியாத நிலையில் மழை வந்ததால், பள்ளியினுள் மழைநீர் புகுந்து பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான புகாரை தொகுதி எம்எல்ஏவிடம் பொதுமக்கள் கூறியுள்ளனர். அதனால் அவர் சென்று பார்த்து அரசுக்கு குறையை சுட்டிக்காட்டியுள்ளார். அதனால் அந்த குறையை அரசு சரி செய்து கொடுக்கும்.

புதுச்சேரியில் 128 அரசு பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ அங்கீகாரம் ஒட்டுமொத்தமாக கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு பள்ளிக்கு சிபிஎஸ்இ அங்கீகாரம் ரத்து செய்ததாக எந்தவித தகவலும் எனக்கு வரவில்லை. அதுபோன்று இருந்தால் அது சரி செய்யப்படும். மின்துறை தனியார் மயம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. ஆகவே அதைப்பற்றி பொதுவெளியில் பேசக்கூடாது. நீதிமன்ற உத்தரவு என்ன வருகின்றதோ அதனடிப்படையில் நாம் செயல்படுவோம்.

புதுச்சேரி அரசு பல்வேறு வகைகளில் வரிகளை போடுகிறது. அதனடிப்படையில் தான் மின்துறையில் நிலைக் கட்டணம் உள்ளிட்டவை போடப்படுகிறது. மின்துறை ரூ.300 கோடிக்கு நஷ்டத்தில் சென்றுகொண்டிருக்கிறது. அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது. அதனை சரி செய்ய வேண்டியதும் இருக்கிறது. அதற்கு ஒருசில நேரங்களில் சில கட்டணங்களை போடுவது கட்டாயமாக இருக்கிறது. திட்டமிட்டு கட்டணத்தை அரசு உயர்த்தவில்லை.

புதுச்சேரியில் உள்ள மின்கட்டமைப்புகள் 40 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டவை. இன்றைக்கு அவை ஒவ்வொன்றாக பழுதாகும் நிலையில் உள்ளது. அதனை மேம்படுத்த வேண்டும் என்றால் ஆயிரக்கணக்கான கோடி தேவை. புதுச்சேரி வளர்ச்சியடைந்து மின்சார தேவை அதிகரிக்கிறது. அதற்கு ஏற்ப கட்டமைப்பை உருவாக்க வேண்டியுள்ளது. இதனடிப்படையில் மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது. வேறு எந்தவகையிலும் அதிகளவில் வசூலிப்பது இல்லை.

மின்துறை தனியார் மயம் முடிவு எதற்கென்றால், நல்ல சேவையை மக்களுக்கு கொடுக்க வேண்டும்; எந்த தடை ஏற்பட்டாலும் உடனுக்குடன் சரி செய்ய வேண்டும்; அதற்கு நிறைய பணம் தேவைப்படுகிறது. அதனை அரசால் கொடுக்க முடியாது. இப்போது ஆர்டிஎஸ்எஸ் என்ற திட்டத்தில் மத்திய அரசு நமக்கு ரூ.150 கோடி மானியமாக கொடுத்துள்ளது” என்றார். அப்போது புதுச்சேரி மாநில பாஜக தலைவர் புதிய பட்டிலில் உங்கள் பெயர் இருப்பபதாக கூறப்படுகிறதே என்று செய்தியாளர்கள் கேட்டபோது, அதற்கு ”நோ கமெண்ட்ஸ்” என்று கூறி அமைச்சர் நமச்சிவாயம் பேட்டியை முடித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *