புதுச்சேரி: புதுச்சேரி அரசு தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவி விவகாரம் தொடர்பாக நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “இந்திய அளவில் பெருமை சேர்க்கும் ஒன்றாக புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் இயங்கி வந்தது. கடந்த சில வருடங்களாக அந்த பல்கலைக்கழகத்தில் நிர்வாக ரீதியில் நடைபெற்று வரும் கோஷ்டி பூசலால் நிர்வாகமே சீர்கெட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 11-ம் தேதி மாலை விடுதியில் தங்கி பயிலும் வெளி மாநில மாணவி ஒருவர் கல்லூரிக்கு சம்பந்தமில்லாத 4 நபர்களால் தாக்கப்பட்டுள்ளார். இரவு இந்திரா காந்தி மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளார்.
இது குறித்து காவல் துறையினருக்கு மருத்துவ நிர்வாகம் தரப்பில் இருந்து தகவல் தெரிவித்துள்ளனர். மாணவி தாக்கப்பட்டு பாலியல் தொந்தரவு செய்யப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியான பிறகு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் பிறகு பிறகு காவல் துறையினர் பல்கலைக்கழக வளாகத்துக்குள் அத்துமீறி நுழைதல், ஆபாசமாக திட்டுதல் போன்ற செயல்களுக்காக சாதாரண வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.
பல்கலைக்கழக நிர்வாகத்தின் அலட்சியம், பொறுப்பற்ற தன்மை ஆகியவற்றாலும், காவல் துறையினரின் காலதாமதமான நடவடிக்கையாலும் இப்பிரச்சனை தவறான கண்ணோட்டத்துடன் அவரவர்களுக்கு மனம் போன போக்கில் செய்திகளாக வெளிவருகின்றன. இது நமது புதுச்சேரி மாநிலத்துக்கு இழுக்கை ஏற்படுத்தும் செயலாகும். உண்மையில் இந்த பிரச்சினையில் பல்கலைக்கழக மாணவி பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டாரா? அல்லது திடீரென ஏற்பட்ட பிரச்சினையால் தாக்கப்பட்டாரா?
11-ம் தேதியே மருத்துவமனைக்கு சிகிச்சையின் போது எம்.எல்.சி போடப்பட்டும், வழக்குப் பதிவு செய்யாமல் காலம் கடந்து 3 நாட்களுக்கு பிறகு மாணவி தாக்கப்பட்டதை தவிர்த்து வேறு பிரிவுகளில் 14-ம் தேதி அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்குப் பதிவு செய்யப்பட்டதில் வேறு உள்நோக்கம் இல்லை என்றாலும் பல்வேறு கேள்விகளுக்கு இடம் அளிப்பதாக உள்ளது.
எனவே, முதல்வர் இந்தப் பிரச்சினையில் புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழத்தின் பாதுகாப்பு, வெளி நபர்களுடைய தினசரி அத்துமீறிய செயல்கள், பல்லைக்கழக மாணவி எந்த பிரச்சினைக்காக தாக்கப்பட்டார், இந்த தாக்குதல் யதார்த்தமாக நடந்ததா? அல்லது பாலியல் ரீதியான துன்புறுத்தலின் போது நடந்ததா? மாணவி தாக்கப்பட்ட சம்பவம் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு தெரிந்த பிறகு நிர்வாகம் எடுத்த உடனடி நடவடிக்கை என்ன? பல்கலைக்கழக நிர்வாகம் ஏன் காவல் துறைக்கு உடனடியாக புகார் அளிக்கவில்லை? பல்கலைக்கழக மாணவி தற்போது பாதுகாப்பாக உள்ளாரா? வேறு எந்த அரசியல்வாதிகள் மூலமாக அந்த மாணவிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதா?
இவ்வாறாக பல்வேறு விஷயங்கள் குறித்து ஒரு பெண் ஐபிஎஸ் அதிகாரி உள்ளடக்கிய ஒரு நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.