புதுச்சேரி, காரைக்காலில் புதன்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு மழை விடுமுறை | Holiday for schools and colleges in Puducherry and Karaikal tomorrow due to heavy rain

1341152.jpg
Spread the love

புதுச்சேரி: புதுச்சேரியில் தொடர் மழை பொழிவதால் புதுச்சேரி, காரைக்காலில் நாளை (நவ.27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையை கல்வியமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக புதுவை, தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. ஒரு வாரமாக புதுவையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது. நேற்று இரவு சாரல் மழை பெய்தது. இந்த நிலையில் இன்று காலை முதல் புதுவையில் மிதமான மழை பெய்து வருகிறது.

குறிப்பாக கடற்கரை சாலை, விமான நிலையம், உப்பளம், ராஜ்பவன், முத்தியால்பேட்டை, முதலியார் பேட்டை, உள்ளிட்ட நகர பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. கிராமப்புறங்களான பாகூர், திருக்கனூர், வில்லியனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது. இருப்பினும் பள்ளி கல்லூரிகள் புதுச்சேரியில் வழக்கம் போல் இயங்கி வருகின்றன.குறைந்த காற்றழுத்த வானிலை காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை எச்சரித்துள்ளது.

இதன் காரணமாக மீனவர்கள் இன்றும் 3வது நாளாக கடலுக்கு செல்லாமல் தங்கள் படகுகளை தேங்காய் திட்டு துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதால், கட்டுமரம், வலை, விசைப்படகு ஆகியவற்றை உரிமையாளர்கள் அவ்வப்போது கண்காணித்து பாதுகாத்து கொள்ளுமாறும் மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மீன்வளத் துறையின் அவசர கால கட்டுப்பாட்டு அறை முழு நேரமும் இயங்கி வருகிறது. எனவே மீனவர்கள் அவசர உதவிக்கு 0413-2353042 என்ற எண்ணிலோ அல்லது அவசர கால செயல் மையத்தின் எண் 1070 மற்றும் 1977 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் என்றும் மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.வங்கக் கடலில் வலுப்பெற்றுள்ள காற்றழுத்த தாழ்வும் மண்டலம் நாகையிலிருந்து சுமார் 740 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து வரும் சூழலில் டெல்டா மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக காரைக்காலில் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. புதுச்சேரி, காரைக்காலில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

பாதுகாப்பு கருதி கடலில் இறங்க பொதுமக்களுக்கு காவல்துறை தடை விதித்துள்ளது. புயல் எச்சரிக்கை காரணமாக புதுவை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 1-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புதுச்சேரியில் தொடர்ந்து மழை பொழிகிறது. இதனால் பள்ளி, கல்லூரி முடிந்து திரும்புவோர் சிரமத்துக்கு இன்று ஆளானார்கள்.

இந்நிலையில், புதுச்சேரி கல்வியமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில், “கனமழை தொடர்வது காரணமாக புதன்கிழமை (நவ.27) புதுச்சேரி, காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *