புதுச்சேரி: சாலையில் கிடந்த ரூ. 2.38 லட்சத்தை போலீஸில் ஒப்படைத்த பரோட்டா மாஸ்டர் கவுரவிக்கப்பட்டார்.
புதுவை தவளக்குப்பம் அடுத்த தானம்பாளையம் நல்லவாடு ரோடு பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் மகளின் மஞ்சள் நீராட்டு விழா கடந்த 2-ம் தேதி நடைபெற்றது. அதில் வந்த மொய் பணம் ரூ.2 லட்சத்து 38 ஆயிரத்தின் மூலம் அரியாங்குப்பத்தில் அடகு வைத்த நகையை மீட்க முடிவு செய்தார்.
இதற்காகப் பணத்தை ஒரு பையில் வைத்துக்கொண்டு அரியாங்குப்பம் நோக்கி மோட்டார் சைக்கிளில் இன்று புறப்பட்டார். தவளக்குப்பத்தில் உள்ள பங்கில் பெட்ரோல் போட்டார். அப்போது அவர் வைத்திருந்த பணப்பை காணாமல் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து தவளைகுப்பம் காவல்துறையில் புகார் அளித்தார். இதனிடையே தவளக்குப்பம் பகுதியை சேர்ந்த பரோட்டா மாஸ்டர் சண்முகம், கீழே கிடந்த பணத்தை எடுத்து வந்து தவளக்குப்பம் போலீஸில் ஒப்படைத்தார். பின்பு அந்தப் பணம் போலீஸார் முன்னிலையில் விஜயகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டது. சாலையில் கிடந்த பணத்தை ஒப்படைத்த பரோட்டா மாஸ்டரின் நேர்மையை போலீஸார் பாராட்டி கவுரவித்தனர்.