தி.மு.க தொகுதிகளுக்கு அடம்பிடித்த காங்கிரஸ்
புதுச்சேரி சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று மாலையுடன் முடிகிறது. என்.டி.ஏ கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.கவுக்கு இடையே தொகுதிப் பங்கீடு முடிந்து வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுவிட்டனர்.
ஆனால் காங்கிரஸ் – தி.மு.க-வுக்கு இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. ஆரம்பத்தில் 20 தொகுதிகள் வேண்டும் என்று பேச்சுவார்த்தையை தொடங்கிய காங்கிரஸ், அதன்பிறகு 16+12+2 என்ற கணக்கில் இறங்கியது. அதாவது காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், தி.மு.க 12 தொகுதிகளிலும், வி.சி.க மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் தலா இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடலாம் என்றது காங்கிரஸ்.

அதை ஏற்க மறுத்த தி.மு.க, வி.சி.க மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியையும் சேர்த்து 18 தொகுதிகளைக் கேட்டது. அதன் பிறகு தொகுதிப் பங்கீட்டில் பிரச்னை தொடங்கியது. கடந்த தேர்தலில் தி.மு.க. போட்டியிட்ட ஐந்து தொகுதிகளை கேட்டு அடம்பிடித்து வந்தது காங்கிரஸ் கட்சி. அந்தப் பட்டியலில் முதலில் இருந்தது முன்னாள் முதல்வர் நாராயணசாமி 2016-ல் போட்டியிட்டு வெற்றிபெற்ற நெல்லித்தோப்பு தொகுதி.
ஆனால் அது தி.மு.க-வைச் சேர்ந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜானகிராமன் தொடர்ச்சியாக ஆறு முறை வெற்றிபெற்ற தொகுதி என்பதுடன், கடந்த தேர்தலில் வெறும் 400 வாக்குகளில் வெற்றியைத் தவறவிட்ட தொகுதி என்பதால் அதைக் கொடுக்க மறுக்கிறது தி.மு.க.
“எங்களுக்குள் பஞ்சாயத்து முடிந்துவிட்டது..”
அதேபோல ராஜ்பவன், முத்தியால்பேட்டை, காலாப்பட்டு, மங்கலம் உள்ளிட்ட தொகுதிகளை கேட்டது. இதற்கிடையில் வேட்பு மனு தாக்கலின் இறுதி நாளான நேற்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் சங்கர், `30 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனியாக போட்டியிடுகிறது’ என்று தன்னுடைய முகநூலில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
அது குறித்து, `புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி!’ – காங்கிரஸ் அதிரடி அறிவிப்பு பின்னணி’ என்ற தலைப்பில் விகடன் இணையப் பக்கத்தில் விரிவாக செய்தியை வெளியிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சியாக அவசர அவசரமாக ஆலோசனையில் ஈடுபட்ட தி.மு.க-வும், காங்கிரஸும், எந்தவித அறிவிப்புமின்றி தனித்தனியே வேட்பு மனுக்களை தாக்கல் செய்தன.

அதன் பிறகும் எந்த தொகுதியில் யார் போட்டியிடுகிறார்கள் என்ற தகவலை இரண்டு கட்சிகளும் தெரிவிக்கவில்லை. நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க-வின் மேலிடப் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன், `காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், திமுக கூட்டணிக் கட்சிகளுடன் 14 தொகுதிகளிலும் போட்டிடுகிறது. எங்கள் கூட்டணி 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்கிறது’ என்று கூறினார்.
ஒருவழியாக பஞ்சாயத்து முடிந்தது என்று இரண்டு கட்சி வேட்பாளர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டார்கள். ஆனால் அந்த நிம்மதி இரண்டு கட்சிகளும் தங்கள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடும் வரைதான் நீடித்தது. அதில் தி.மு.க தாங்கள் போட்டியிடும் தொகுதிகள் என்று குறிப்பிட்டிருந்த ஐந்து தொகுதிகளில், காங்கிரஸ் வேட்பாளர்கள் `ஏ’ மற்றும் `பி’ விண்ணப்பங்களுடன் வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தனர்.
தி.மு.க-வை எதிர்த்து களமிறங்கும் காங்கிரஸ் வேட்பாளர்கள்
இதில் ஏகத்துக்கும் டென்ஷனான தி.மு.க, இன்று காலை முதல் காங்கிரஸ் தரப்பிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருக்கிறது. மங்கலம் தொகுதியில் தி.மு.க தரப்பில் எஸ்.எஸ்.ரங்கனும் காங்கிரஸ் தரப்பில் ரகுபதியும், ராஜ்பவன் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் குமரனும், தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் ப.கண்ணனின் மகன் விக்னேஷ் கண்ணனும், காலாப்பட்டு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் அமைச்சர் ஷாஜகானும், தி.மு.க சார்பில் செந்தில் என்ற ரமேஷும், நெல்லித்தோப்பு தொகுதியில் தி.மு.க தரப்பில் கார்த்திகேயனும், காங்கிரஸ் தரப்பில் ஆனந்தபாபுவும், திருபுவனை தொகுதியில் தி.மு.க தரப்பில் அங்காளனும், காங்கிரஸ் தரப்பில் வடிவேலும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருக்கின்றனர்.

இந்த அனைத்து மனுக்களையும் தேர்தல் ஆணையம் ஏற்றிருக்கும் நிலையில், வாபஸ் வாங்கப் போவது யார் என்ற சிக்கல் நீடித்து வருகிறது. குறிப்பாக காங்கிரஸ் தாரப்பில், `நாங்கள் யாரும் வாபஸ் வாங்கப் போவதில்லை’ என்று தெரிவித்து வருகின்றனர். அத்துடன் காங்கிரஸ் வேட்பாளர்கள் சமூக வலைதளங்களில் வாக்கு சேகரிக்க ஆரம்பித்துவிட்டனர்.
இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சியின் சீனியர் ஒருவரிடம் பேசியபோது, “வேட்பு மனு தாக்கலின் இறுதி நாளான 23-ம் தேதி காலை வரை கூட்டணி இருக்கிறதா இல்லையா என்ற குழப்பம் நீடித்தது. அதன்பிறகு எப்படியாவது கூட்டணியை இறுதி செய்துவிட வேண்டும் என்று தி.மு.க தரப்பில் ஆலோசனை செய்து கொண்டிருந்தனர்.
“சி ஃபார்ம் அனுப்பியிருக்க வேண்டும்…”
ஆனால் பேச்சுவார்த்தை முடிவதற்கு முன்பாகவே, எங்கள் கட்சிக்காரர்களை அழைத்து வேட்புமனுக்களை கொடுக்க ஆரம்பித்துவிட்டார் எங்கள் தலைவர் வைத்திலிங்கம். அப்போதுதான், `காங்கிரஸ் 30 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி’ என்று விகடன் இணையப்பக்கத்தில் செய்தி வெளியானது. அதில் பதறிப் போன தி.மு.க தலைவர்கள், `பேச்சுவார்த்தையில் இருக்கும்போதே ஏன் இப்படி செய்கிறீர்கள்? இதுதான் கூட்டணி தர்மமா?’ என்று எங்கள் தலைவரிடம் கேட்டதுடன், 16-14 என்ற டீலுக்கும் ஒப்புக் கொண்டது.
அதையடுத்து `ஏ’ மற்றும் `பி’ விண்ணப்பங்களை பெற்றுச் சென்ற எங்கள் கட்சிக்காரர்களிடம், அதை திரும்ப எடுத்து வருமாறு கூறினார் எங்கள் மாநிலத் தலைவர். ஆனால் அவர்கள், `அப்படியெல்லாம் கொடுக்க முடியாது’ என்று சொல்லிவிட்டு, வேட்பு மனுக்களை தாக்கல் செய்துவிட்டனர்.
இப்போது முன்னாள் அமைச்சர் ஷாஜகான் உட்பட யாரும் வேட்பு மனுக்களை திரும்பப் பெற மாட்டோம் என்று கூறி வருகின்றனர். அதனால்தான் இந்த சிக்கல். எங்கள் கட்சிக்காரர்கள் `ஏ’ `பி’ விண்ணப்பங்களை தர மறுத்த உடனேயே, கட்சியின் தலைவர் தேர்தல் ஆணையத்துக்கு `சி’ ஃபார்ம் அனுப்பி ரத்து செய்திருந்தால் இந்த சிக்கல் வந்திருக்காது” என்றார் விரிவாக.
இதற்கிடையில் மங்கலம் தொகுதியில் தனக்கு சீட் வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநிலத் தலைவர் வைத்திலிங்கத்தின் காரின் முன் படுத்து ஆர்ப்பாட்டம் செய்த ரகுபதியும் வேட்பு மனுவை தாக்கல் செய்திருக்கிறார். இது குறித்துப் பேசிய அவர், “20 ஆண்டுகளாக கட்சிக்கு நான் விசுவாசமாக பணியாற்றியதால் கட்சி இந்த வாய்பை வழங்கியிருக்கிறது. நான் ஏன் வாபஸ் பெற வேண்டும்? நான் செய்ய மாட்டேன்” என்கிறார் உறுதியாக.