புதுச்சேரி: திருமணத்தை மறுத்த காதலி; பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூர காதலன்! – அதிர வைக்கும் பின்னணி

Spread the love

புதுச்சேரி நேதாஜி நகரைச் சேர்ந்தவர் காவ்யா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது), அண்ணா சாலையிலுள்ள பிரபல துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். இவரும், இந்திரா நகரைச் சேர்ந்த ஓட்டுநர் ஜோசப் என்பவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்திருக்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல வேலை முடிந்ததும், காவ்யா ஒதியன்சாலை காவல் நிலையம் வழியாக வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தன்னுடைய இருசக்கர வாகனத்தில் அவரை பின்தொடர்ந்து சென்ற ஜோசப், காவ்யாவிடம் வாக்குவாதம் செய்தார்.

காதலியுடன் ஜோசப்

ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றியதையடுத்து, பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை காவ்யா மீது ஊற்றி தீ வைத்தார் ஜோசப். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் அதிர்ந்து போன காவ்யா, உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்த நிலையில் `அம்மா… அம்மா… காப்பாத்துங்க..’ என்று அலறியபடியே இங்கும் அங்கும் ஓடினார்.

ஜோசப்பின் கைகளிலும் பெட்ரோல் சிதறி தீப்பிடித்தது. அதைப் பார்த்ததும் என்ன நடக்கிறது என்று புரியாமல், அங்கு நின்றிருந்தவர்களும் பதறியடித்துக் கொண்டு ஓடினர். ஒருகட்டத்தில் உடல் முழுவதும் எரிந்த நிலையில் மயங்கி கீழே விழுந்தார் காவ்யா.

அங்கிருந்தவர்கள் உடனே சுதாரித்துக் கொண்டு காவ்யா மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். அதன்பிறகு அங்கு வந்த போலீஸார் காவ்யாவையும், ஜோசப்பையும் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். காவ்யாவுக்கு 80% தீக்காயங்கள் இருந்ததால் ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த காவ்யா, இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து காவ்யாவின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், 20% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் ஜோசப்பிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜோசப்

இந்த சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய விசாரணை அதிகாரிகள், “கார் டிரைவரான ஜோசப்பும், காவ்யாவும் கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக காதலித்து வந்திருக்கின்றனர். உன்னைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று ஜோசப் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில், இருவரும் நெருங்கிப் பழகியிருக்கின்றனர்.

ஆனால் அதன்பிறகுதான் ஜோசப்புக்கு திருமணமானதும், அவனுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதும் காவ்யாவுக்கு தெரிய வந்தது. அதுகுறித்து காவ்யா ஜோசப்பிடம் வாக்குவாதம் செய்தபோது, `மனைவியை விவாகரத்து செய்துவிடுகிறேன்.

உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்’ என்று கூறி அவரை சமாதானப்படுத்தியிருக்கிறான் ஜோசப். அதன்படி மனைவியை விவாகரத்தும் செய்திருக்கிறான். ஆனாலும் விரக்தியான மன நிலையிலேயே இருந்த காவ்யாவுக்கு, துணிக்கடையில் வேலை செய்த வேறு ஒருவருடன் காதல் ஏற்பட்டிருக்கிறது.

அதையடுத்து ஜோசப்பை சந்திப்பதை தவிர்த்த காவ்யா, அவரை திருமணம் செய்து கொள்வதற்கும் மறுத்து வந்திருக்கிறார். ஆனால் அடிக்கடி திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஜோசப் தொல்லை கொடுத்ததால், எங்களிடம் புகாரளித்தார் காவ்யா.

சம்பவ இடத்தில் சீனியர் எஸ்.பி கலைவாணன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உள்ளிட்ட போலீஸார்

அதனடிப்படையில் நாங்களும் சில தினங்களுக்கு ஜோசப்பை அழைத்து எச்சரித்து அனுப்பினோம். இந்த நிலையில்தான் நேற்று மறுபடியும், காவ்யவை வழிமறித்து திருமணம் குறித்துப் பேசியிருக்கிறான். அப்போது, `உனக்கு கல்யாணமாகி குழந்தைங்க இருக்கறத மறைச்சி என்னை ஏமாத்திட்ட. இனிமேல் நமக்கு கல்யாணமெல்லாம் இல்ல’ என்று கூறியிருக்கிறார் காவ்யா. அதன்பிறகுதான் இப்படி ஒரு காரியத்தை அரங்கேற்றியிருக்கிறான் ஜோசப்” என்றனர் விரிவாக.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *